Wednesday 24 December, 2008

சாத்தான்களின் வருகையால் ..


மனிதம் நசுங்கும் பொழுதொன்றில்
வரும் என் அவலக்குரல் -உங்களுக்கு
ஒப்பாரிப் பாடாலாய் தோன்றலாம்
இதுதான் வாழ்க்கை எமக்கு
நித்தம் சப்பாத்துக் கால்களில் மிதிபட்டு
நசுங்குகிறது எம் குரல்வளை...

உயிர் உறையக் கதவடைத்து துயில்கையில்
நாய்களில் ஓலத்தில் எமனின் பிரசன்னம் !
மூச்சு விட மறந்து உயிர் பற்றி தவிக்கையில்
இடித்து உடைகிறது கதவு
தாழ்ப்பாள் தெறிக்க ...

இராணுவ மிருகங்கள் ஊர் புகுந்தபின்
அன்றாட வலிகளாய் போனது இதுவும் ..
ஆண்பிள்ளைகள் கைதாக்கி முற்றத்திலே
சோதனை என தொட்டுத் தடவுகையில்
செத்துப் போகிறாள் முதல் தடவை தமிழிச்சி ..

பெற்றவர்
, கட்டினவர் கண்முன்னே
அடித்து உதைத்திழுத்து செல்லுகையில்
யார் கதறலும் விழுவதில்லை
நடுநிசி ,உச்சிப் பொழுது எதுவும் கிடையாது
தமிழனின் உயிருக்கு ..
நித்தம் பலி வேண்டும்
புத்தனுக்கு படையலாய் ...

கைதாகிப் போனவர் நாளை
சுடப்பட்டு மூச்சடங்கி கிடப்பார்
வாய்பிளந்து ,குருதி காய்ந்து ஈ மொய்க்க ..
நாடான்ற தமிழன் நாதியற்று தெருவினிலே
சாத்தான்களின் வருகையால்
வீதியெங்கும் முகாரி ராகம்...

என் ஒப்பாரிப் பாடல் இன்னும்
சத்தமாய் ஒலிக்கும் உம் காதுகளில்
ஊர் மொத்தம் சுடுகாடாய்ப் போனதில்
செத்து விழும் பிணங்களுக்கு மத்தியில் நின்று
இன்னும் சத்தமாய் ..
இனி .....

Thursday 11 December, 2008

சுயம் தொலைத்தவள் ...


கல்யாண கனவுகளில்
காத்திருந்தேன் நானும் ...
ஒருநாள் பொழுதொன்றில்
ஆடவனின் வலிய கரங்களுக்குள்
அடங்கிப் போனது என் பெண்மை ..

ஒரு புது உலகம் ,புதிய உறவுகள் ...
புரிந்தும் புரியாமலும் ஒரு வாழ்க்கை ...
காதலாய் காத்திருந்த நாட்கள் போய்
கொஞ்சம் கொஞ்சமாய் மனித விகாரங்கள்
பல்லிளிக்க தொடங்க
வார்த்தைகள் சாடையாகின்றன..

உன் ஆண்மையின் பெயர் சொல்லி
வதைக்கும் கணங்களில்
கரையும் கண்ணீரில்
பொசுங்குகிறது என் காதல் ...

என் சுயம் எழுந்து வீரிடுகையில்
பெண் ,பொறுமையின் அடையாளம் என்கிறாய்
பழைய பஞ்சாங்கங்க நளாயினி
அருந்தி,வாசுகி என பட்டியளிடுகிறாய்
உன் இன அயோக்கியர் பெயர்
தெரிந்திருந்தும் மௌனிக்கின்றேன்...

என் ரொக்கங்களை அள்ளிய
உன் கரங்கள் அவ்வப்போதும்
அணைக்கத்தான் செய்கின்றது
அடியின் வலிகளும் ரணங்களும்
அழுகின்றன ஊமையாய் ...

என் விருப்புக்கள் ஆசைகள்
எல்லாம் மறைந்துவிட்டு
மறந்து விட்டு
வேற்று மனுசியாகிறேன்
எனக்குள் நானே ..

Sunday 30 November, 2008

நினைவுச் சின்னமாய்...


சுட்டுச் செல்கிறது
முதல் முறையாய் கண்ணீர்
வழிந்த கன்னத் தடத்தில்
அமில எரிச்சல் ...

உச்சியில் நிற்பதாய்
கொக்கரித்த மனம் -இன்று
தலை கீழாய் விழுந்ததில்
துண்டு துண்டாய் இதயம் ...

பாதரசமழிந்த கண்ணாடியில்
கீறுபட்ட கோடுகளினோடு
கை கொட்டி சிரிக்கிறது
என் முகமூடி ...

தோற்றுப் போக மாட்டேன்
என தொங்கி நின்ற மனதை
'பெவிக்கால்' ஒட்டி
பத்திரப் படுத்துகிறேன் ...


சில நம்பிக்கைகள் அழிந்ததால்
சில தோல்விகள் வலிக்கின்றன
நாளை அனுபவம் என்று சொல்லி
அதுவும் கண் சிமிட்டும் ..

நாளைய நினைவுகளுக்கு
நினைவுச் சின்னமாய்
இருந்து விட்டுப் போகட்டும்
என் இதயம் ...

Sunday 23 November, 2008

காதல் ஏன் காதலானது ...?


சிறு புள்ளியில் தொடங்கும்
ஓவியத்தின் தெரிகிறது
அருவமான காதல் ...

ஆசையாய் வைத்து
மொட்டவிழும் முதல் பூவிற்காய்
காத்திருக்கையில் காதல் ...

முத்தமிட்டுச் செல்லும்
சிறு குழந்தையின் எச்சிலின்
ஈரப் பிசுபிசுப்பில் காதல் ...

உறக்கத்தின் நினைவுகளில்
தலை கோதும் விரல்களின்
கதகதப்பில் கனவுகளாய் காதல் ..

நண்பனின் கரம் பற்றி
நடக்கும் வினாடிகளில்
நம்பிக்கையாய் சிரிக்கும் காதல் ..

அனைத்தும் தொலைத்தாய்
தனித்து அழுகையில்
தோள் தரும் நட்பில் காதல் ..

வீடு பூட்டிக் காவல் வைத்த
நாய்க் குட்டியின்
விசுவாசத்தில் காதல் ..

எங்கோ யாருக்கோ நடக்கும்
அவலத்தைக் கண்டு கசியும்
விழியில் கண்ணீராய்க் காதல் ...

விரும்பிய பதார்த்தம்
ரசித்து சமைக்கையில் சூடு பட்ட
விரல்களில் எரிகிறது காதல் ..

இயற்கையை வாழ்வை
அணு அணுவாய்
ரசிக்கையில் காதல் ...

எல்லோருக்குள்ளும் எப்போதுமே
ஒளிந்துதான் இருக்கிறது
காதல் ...
அப்படியெனில்
ஆணும் பெண்ணும் செய்யும்
பரஸ்பர நேசம் மட்டும்
எப்படிக் காதலானது ... ...

Sunday 2 November, 2008

புன்னகைப் பூவிற்கு ஒரு அஞ்சலிக் குறிப்பு ..


செல்வமே தமிழரின் செல்வனே..
தமிழ்ச் செல்வனே..
போராட்ட வாழ்க்கையில் புன்னகையால்
அறியப்பட்ட எம் அண்ணனே ...

களங்களில் சமராடுகையில் தீரம் காட்டினாய் ..
அரசியல் மேடைகளில் விவேகம் காட்டினாய் ...
தெரிந்தவனுக்கு உங்கள் புன்னகை புரியும்
தெரியாதவனுக்கு உங்கள் புன்னைகை தெரியும் ..

அதன் அர்த்தத்தின் ஆழத்தை
தலைவன் மட்டுமே அறிந்திருப்பார் ....
உம்முடன் இருந்த தோழர்களும் தான் ..
அறுவருடன் ஆகுதியான எம் அண்ணலே ..
ஓராயிரம் ஆண்டானாலும் - எம்
நினைவுகளில் வாழ்வீர் !

உலகமெங்கும் சாமாதான பிரதிநிதியாய்
உலாவந்த செல்வனே ..
வலுவிழந்த கால்களோடு போராடிய
உன் சிறகுகளை சிதைத்தல்லவா
சிங்கள வல்லூறுகள் கொக்கரித்தது ...

உம் வீரம் மட்டுமல்ல புன்னகையும்
காலம் காலமாய் கதை சொல்லும் ..
நின்மதியாய் துயில்வாய் எம் அண்ணா
நாளை நாம் தூவும் விடியல்
மலர்களில் உன் புன்னகையும்
மீண்டும் பூப்பூக்கும் .....

Wednesday 15 October, 2008

என் கண்களில் இன்னும் ஜீவன் ...

என் கண்களில்
இன்னும் ஜீவன் மிச்சமாய் ..
உயிர் வாழ்வதன் அடையாளத்தோடு
மூச்சுவிடும் தேகம் ..
பசியில் சுருங்கிய இரைப்பை மட்டும்
விரியவேயில்லை ..

பருக்கைகள் அற்ற பானை
எப்போதும் அடுப்பில் ..
பாவம் என் பூனையும்
இன்னும் காத்திருக்கிறது
என்னைப் போலவே...

பசித்து அழும் என் தங்கைக்கு
மாங்காய் பறித்துத் தருகிறாள்
என் அன்னை ..
எத்தனை நாளைக்கு
மழைக்கு பதிலாய் குண்டு விழுந்ததில்
என் வன்னிக் காடுகள்
காய்த்து எரிந்தது கிடக்கின்றன ..

தாகம் தீர்க்க தண்ணீர் தேடிய
எமக்கு
இனி கவலை இல்லை ..
கார்த்திகை மார்கழியில் மழை வருமாம்
அம்மா சொன்னார் ...
என்ன கூடவே பாம்பும் பூரானும்
மறைவிடம் தேடி
எம் மரத்தடி வரக்கூடும் ..
எங்களைப் போலவே
அதன் வீட்டையும்
குண்டு போட்டிருப்பானோ ..

நித்தம்
விழும் 'செல் 'க்கு
விழுந்து படுத்தே
என் முழங்கால்ச் சில்லுகள்
தேய்ந்து விட்டன ..
அப்பாவை தேடும் தம்பிக்கு
எப்படிச் சொல்வேன் ..
விறகு பொறுக்க போனவர்
பிணமாய்த் தான் வந்தாரென..
அம்மா அழுதாள்
அப்பாவுக்காகவும்
பசித்தழும்
எங்களுக்காகவும் .....

உயிர் உறைய காத்திருக்கும்
ஒவ்வொரு வினாடியும்
கடந்து செல்லும் 'கிபிர்'
சத்தத்தில் பசி கூட
அவ்வப்போது மறந்துதான் போகிறது..
பதுங்கு குழியில் பிறந்த
என் வாழ்வு தொடர வேண்டுமெனில்
இன்னும் உயிர்
வாழ வேண்டும் நான் ..

பசிக்கிறது ...
எனக்கும்
என் மரத்தடி அணிலுக்கும் ..
கொஞ்சம் கொஞ்சமாய்
கரைந்து கொண்டிருக்கும்
ஜீவனுக்கு
சொல்லுகிறேன் நானும்
எம்துயர் நாளை
தீர்ந்து விடுமென....

நாளைய உலகிற்கு நாம் என்ன விட்டுச் செல்வோம் ?

எவ்வளவு இழி பிறவி நாம்
நீ கொடுப்பதை எல்லாம் எடுத்துக் கொண்டு
திருப்பிக் கொடுப்பதென்ன?

பசுமைசூழ் இவ்வுலகத்தை
பாழ்வெளியாக்கி விட்டு
மானிடப்பிறவி நாமென மார்தட்டி நிற்கின்றோம்
காடுகளை மொட்டையாக்கி
கொங்கிரிட் சுவரெழுப்பி
மேகத்தை தொட்டவனே
உன் மகத்துவத்தை என்ன சொல்ல..

மழைத்துளிக்கு பதிலாய்
அமிலமழை பெய்ய வைத்தாய்
என்னவாகும் பூமி ?
காற்று
மண்டலத்தை கரியமிலமாக
மாற்றி விட்டு
நுரையீரல் வெடிக்க
மூச்சு முட்டுகிறாள் உன் அன்னை..

இருக்கும் மரத்தையெல்லாம் வெட்டி தள்ளி
கர்ப்பிணி மேகத்தை கருகலைப்பு செய்தாய்
இப்போது மறக்காமல்
மழை வரம்
வேண்டி கழுதைக்கு கலியாணம் வேறு
ம்ம்ம்ம்ம்
இன்னும் இரங்குகிறாள் இல்லை பார் ..

ஓசோன் கூரையில் ஓட்டை போட்டாய்
அந்தாட்டிக் பனிபாறைகள் உருகி வழிகின்றன ..
அணுகுண்டு சோதனை என ஆளாளுக்கு
வெடித்ததில் பூமிப்பந்தே
கறுத்துக் கொண்டிடுக்கிறது .....
பிறக்கும் தேவதைக் குழந்தைகள்
இப்போது சிறகுமட்டுமல்ல
அங்கங்கள் இல்லாமல்
அவலட்சணமாய் வருகிறார்கள் ..
ம்ம்ம்ம்
நீ தொடர் உன் வேலையை ...

காற்று நசுங்கும் போக்குவரத்து நெரிசலில்
சுவாசம் எல்லாம் தூசுபடலம்
தும்மினால் கூட கரிக்கும் மூக்கு ....
போதாக் குறைக்கு மணல் வாரித் தின்று தீர்த்து
உன் மடியெல்லம் வளிச்சாச்சு ..

நீர் நிலைகள் வற்றி பசித்தவன் வயிறுபோல்
வெடித்து காய்கின்றன
2075 ல் குடி தண்ணீர் இருக்காதாம்
பரவாயில்லை விடு
அதுவரை நாம் என்ன
உயிர் வாழவா போகிறோம் ..

இன்னும் என்ன வைத்திருக்கிறாய் சொல்லிவிடு
பறித்துக் கொள்ள நாம் மீதமிருக்கின்றோம்
பெற்ற தாயை மூளியாக்க ஆசைப்படும்
பிள்ளைகள் நாங்கள்...
ஆனாலும் சந்திரனுக்கே
ராக்கெட் விடும் அதி புத்திஜீவிகள் ..

நாளைய தலைமுறைக்கு
நாம் என்ன விட்டு செல்வோம் ?

கந்தக நெடி விசும் காற்றையா..
பிளாஸ்ரிக் பூக்களின் தோட்டத்தையா ...
கார்பன் வாயுவால் வீங்கி வெடிக்கும்
மொட்டைக் மலைக் காடுகளையா .....
நாளைய உலகிற்கு
நாம் என்ன விட்டுச் செல்வோம் ?

Saturday 20 September, 2008

விடியலுக்காய் ..


சென்னை நகர நெருக்கடியில்
தீப்பெட்டி அடுக்குகளாய்
நிமிர்ந்து விட்ட
ஒரு ஜன்னல் ஓரத்தில்
ஈழவள் நானும்
தனிமையில்...

புளுதி படியும்
தெருவோர நியோன்
விளக்கு வெளிச்சத்திலும்
நாய்களின் சலசலப்பில்
தூக்கம் வர மறுத்த
இரவுகளோடு
என் நினைவுகளும்
எங்கேங்கோ
பயணிக்கும்...

ஞாபக முட்கள்
நெஞ்சை கிழிக்க
கடிவாளம் அற்ற
நினைவுகளோடு
ஜக்கியமாகின்றேன்....

கண்களில்
கசியும் நீரை
தென்றல் உலர்த்தி செல்ல
கடலோரக் காற்று
தேதி சொல்லும் நம்பிக்கையில்
உறக்கம் தழுவ
என்னையும் அறியாமல்
தூங்கிப் போகிறேன்
விடியலுக்காய் ..

Monday 25 August, 2008

நேசம் சொன்ன வேளையில்..


என் கனவுகளை
மொத்தமாய் உன்னிடம்
அடகு வைத்து நின்ற வேளையிலும்
உன் பார்வைக்காய்
கால் கடுக்கக் காத்திருந்தபோதினிலும்
உன் நேசம் எனக்கானதாயில்லை

என் ப்ரியம் சொல்லிக் காத்திருக்கையில்
என் மனக் கனவுகளை உதைத்தழித்தாய்
இப் பிரபஞ்சததைவிட அதிகமாய்
உனக்காய் நான் சேமித்ததெல்லாம் பறித்துக்
கேலி செய்து விலகிச் சென்றாய்

நிஜம் உறைக்க மெல்ல விழித்து
என் இதயச் சில்லுகளில் உன்
சுவடழித்து நிமிர்கையில்
சிரித்து நிற்கிறாய்
என் காதோரம் கிசுகிசுக்கிறது
உன் மூச்சுக்காற்று
'என் நேசம் உனக்கே தானென்று' .....

நான் நேசித்த ஜீவன்
காயப் படுத்தி விடக்கூடாதென்று
விலகி நடக்கிறேன்
தனித்து வந்த பாதையில்
வெகுதொலைவு கடந்தபின்
நானுணர்ந்த வலி
உனக்கும் வேண்டாமே

மீண்டும் நாம் சந்தித்தால்
நிதானமாய் நலம் விசாரிப்போம்
தத்தம் துணையோடு..
அதுவரை வாழ்ந்திடலாம்
நீ நீயாயும்
நான் நானாயும்..

Sunday 17 August, 2008

இயற்கையின் ரகசியம் புரிந்துவிட்டால்......



ஆதி மனிதனின் முதல் தேடல் ...
ஆதாம் ஏவாளின் முதல் சந்திப்பு ...
கருவறைக் குழந்தையின் பூமியின் சிபரிஸம் ...
மழைத்துளி மண்ணிடம் பேசும் முதல் ரகசியம் ...
எங்கும் வியாபித்த கண்ணுக்கு தெரியா காற்று ...
எண்ணி எண்ணி தவறவிட்ட நட்சத்திரமற்ற வானம் ...
நீலக்கடலின் கடைசி விளிம்பு ...
மொட்டவிழ்க்கும் மலரின் முதல் சுகந்தம் ...
புல் நுனிக்கு பனித்துளி கிரீடம் வைக்கும் நொடி ...
தொலைந்து போன காதலின் மிள்சந்திப்பு ...
நீல வானின் மறு பக்கம் ...
வானவில் ஜாலத்தின் அரைவட்டம் ...
ஈருயிர் இணைந்து ஒரு உயிர் உருவாகும் அதிசயம் ...
மரணத்தின் நெடி அறிந்த மனிதனின் இறுதி நினைப்பு.. .
உயிர் கரைந்து காணாமல் போகும் மாயம் ...
முட்டி மோதி யுகம் தோறும் அலைகள் கரையிடம் பேசும் ரகசியம் ...
யுத்த சத்தற்ற உலகம்...
கலைந்து போன கனவு..

இத்தனைக்கும் விடை தெரிந்தால்
வாழ்க்கை எப்படி இருக்கும்?
ம்ம்ம்.....
என் காதுகளில் கிசுகிசுகிறது இயற்கை
"இயற்கையின் ரகசியம் புரிந்துவிட்டால்
வாழ்க்கையில் சுவரஸம் எது...? "

Saturday 9 August, 2008

நட்பு என்று சொல்லிக்கொண்டு....


வாழ்க்கைப்பாதையில்
அனைத்தையும் தொலைத்ததாய்
நினைத்துத்தனித்திருந்த வேளையில்
நீயாகவே வந்தாய்..
நட்பு என்னும் பெயரோடு..
நான் சாய்ந்து கொள்ளத்
தோள் தேடுகையில்
உன் மடியினையே தந்தாய்-இன்று
பல வேஷமிட்டு பொய் பரப்பிச்
செல்கிறாய்...

உன் வார்த்தைகளில் தேன் தடவி
மெல்லக் கொல்லும் விஷ
ஜாலத்தை எங்கு கற்றாய்?
சிரித்துச் செல்லுகிறாய் நித்தம்
பல்லிடுக்கில் வழிகிறது பொறாமை
உன் கண்கள்
சில நேரங்களில் காந்தமாயும்
பல நேரங்களில் படுகுழியாயும் மாற
சித்தம் கலங்கி
விழுந்து எழும்புகின்றேன்-ஆனாலும்
நன்றி தான் சொல்வேன் உனக்கு
பல பாடங்களைக் கற்று கொடுப்பதும் நீதான்!
நின்று நிதானித்து
மனிதனின் விகாரங்களைத் தவிர்த்து
முகமூடி வேஷங்கள் களைந்து
இந்த உலகின் நிஜத்தை அறிய
தெரிந்துவிட்டேன்
உன்னுடன் பழகிய நாளிலிருந்து...

உன்னை நேசித்து விட்டேன்
என் நட்பால்
உன் சுயம் அறியாமல்...
பிரிந்து செல்லும் வழி தெரியவில்லை
வெறுத்துத் தூக்கி எறியவும்
நீயே
கற்றுக் கொடுத்து சென்றுவிடு !

Thursday 31 July, 2008

அழகான அந்த மாமரம் அடிக்கடி நினைவில் வரும்...


அடர்ந்து பரந்த
மரக்கிளைகளில்
கலர் சொல்ல தெரியா நிறத்தின்
இளங்குருத்தின் வாசத்தை
சுவாசத்தில் ஏற்றி காத்திருப்போம் நாம்
அண்ணாந்து பார்த்தபடி
முதல் மாம்பிஞ்சு துளிர்விடும்
அந்த ஒற்றை நாளிற்காய்...
பூ விடும் காலத்தில்
எம் மாமர ஊஞ்சலுக்கு
விடுமுறை கொடுக்கும் அப்பா
எம்மை தொட்டுப் பார்த்து
ஏங்க வைப்பார்
அந்நேரங்களில்...
பிஞ்சுகள் வர தொடங்க
சொல்லி வைத்தாற்போல்
எப்படித்தான்அந்தனை குருவிகளும் ,பறவைகளும்
வருகின்றன என எண்ணி வியந்ததுமுண்டு
பலவித குரல் எழுப்பி தம்
வருகையை ஆர்ப்பாட்டமாய்
முன்னறிவித்தபடி எம்மை போலவே
காத்திருக்கின்றனவோ..
கொஞ்சம் கொஞ்சமாய்
மாம்பிஞ்சுகள் உருமாறத் தொடங்க
மரத்திலேயே கடித்து வைத்து
நாமும் அணில் பிள்ளைகளாவோம்..
'கறுத்த கொழும்பான்'
நினைக்கவே இனிக்கின்றது...
இங்கும் விதம் விதமாய் மாம்பழங்கள்
புது பெயர்களில்,புது வடிவத்தில்...
இன்று வரை என்கண்களில் படவில்லை
எம் ஊர் 'கறுத்தக்கொழும்பான்'

எங்கள் மரத்தில் பழுக்க தொடங்க
ஊரே மணக்கும் வாசம்..
அரிசி பானையிலும், வைக்கோலுக்குள்ளும்
ஒளித்து வைத்து பழுக்க வைத்த நாட்கள்
நினைவுகளை வருடுகிறது
பல நேரங்களில் சந்தோச தொல்லையும் கூடத்தான்
மூன்று நேர சாப்பாடும் மாம்பழத்தோடு முடிவதும் உண்டு..
அந்தேரங்களில் இந்த மரத்தை
சபித்த நேரங்களும் உண்டு..
இன்றும் அம்மாவின் வார்த்தைகளிலும்
எம் வெளி சொல்லா நினைவுகளிலும் வாழ்கிறது
அந்த மாமரம்..
அதன் கீழ் வெடிய பதுக்கு குழிக்குள்
இருந்து மாங்காயோடு கழிந்த
அந்த இருண்ட நாட்களும் ...
நினைவில் நிற்பது
பழத்தின் வாசம் மட்டுமல்ல
நாம் தொலைத்த வாழ்க்கையும் தான்

இப்போதும் நீ
பூ பூப்பாய் பிஞ்சுகள் தொங்கும்
ஊரே மணக்கும்
அணில் கடி கடிக்க
நாங்களும் இல்லை....
அணில் ,குருவிகளும் அற்று....




Thursday 17 July, 2008

துயரங்களை துரத்திக்கொண்டு..


யாதுமற்ற பெருவெளியொன்றின்
தடுக்கி விழவைக்கும் விளிம்பொன்றில்
எங்கும் சூழ்ந்த கருமையோடு
தனித்து நிற்கின்றேன் யாருமற்று..
கால்களை உரசிச் செல்லும் காற்று
அவ்வப்போது கீழிழுத்தும் செல்லும்
காதடைத்து செய்தி சொல்லும் தென்றல்
சில பாடல் வரிகளை கவர்ந்து வரும்
எங்கோ ஒரு ஜீவனின் புல்லாங்குழல்
வழியும் சோக இசையோடு...

சுழன்றடிக்கும் சில புயல்களின் மத்தியில்
சிறு நாணலாய் திசைமாறி
நிமிர்ந்தெழுவேன் மீண்டும்..
அவ்வப்போது
அடர்ந்து பரந்து கிடக்கும் இருட்டோடு
ஐக்கியமாகி காணாமல் போவதுமுண்டு
மீண்டும் தட்டுத்தடுமாறி
வழி நுகர்ந்து கரைசேரும் போதெல்லாம்
எங்கோ ஒருகை காலிடறி விழவைத்து
ஆங்காரமாய் பல்லிளித்து விலகிச்செல்லும்...
மனக்கண்ணில் ஊசலாடும்
எனக்கான பாதையினை
தொட்டுவிட தொடரும் மனம்..
முட்டி மோதி வீழ்ந்தெழுந்து
விரையத்தான் நினைக்கின்றேன்
அவ்வழியில் நீயிருந்தால்
கை கொடுக்க வந்திடாதே-என்
என் நம்பிக்கையை முடமாக்க அது ஒன்றே போதும்
கொஞ்சம் விலகியே நின்றுவிடு
நானாய் எழுந்திடுவேன்
இன்று இல்லையேல் என்றேனும் .....

Monday 23 June, 2008

என் கனவுகள் காத்திருக்கின்றன...


பெண்மையின் அடையாளமாய்
யாரோ வைத்த குறியீடுகளைக் கொண்டு
என்னை அடக்கும் உங்களால்-என்
உணர்வுகளுக்கு வேலி போட்டதாய்
இறுமார்ந்திருக்கிறாய்
எனக்கான தேடல், ஆசைகள்
கனவுகள் அனைத்தையும்
மறைத்துக்கொண்டு நானும்..
நாகரீகத்தின் பாசாங்கின்
வேசத்தோடு ...
புரிந்தும் புரியாமலும்
என்முன்னே நிற்கிறது
எனக்கான என் வாழ்வு
முற்றும் சுழ்ந்த
வெறுமையின் தனிமையோடு..

முகமூடிகளோடு உலாவரும் உங்களிடம்
எவ்வாறு பிரிந்துணர்வேன்
நீங்கள் நீங்களாகவே இருக்கும்
தருணம் எதுவென்று.. என்
கண்களை நேரில் சந்தித்திருந்தால்-என்
கனவுகளை அறிந்திருப்பாய்-ஆனால்
பொட்டழிந்த என் நெற்றியல்லவா
உன் கண்ணுக்கு தெரிகிறது

பல வர்ணங்களை என்னை சுற்றி
நிறைத்துவிட்டு
வெண்மையை மட்டுமே
எனதாக்குகிறாய்-நிறமறியா
விழிகளாய் இருந்திருக்க கூடாதா
என் கண்கள்...வாச
மலர்த்தோட்டத்தின் மத்தியில் விட்டு
பூக்களுக்கு காவலாய் பணிக்கும் உன்னால்
வாசத்தை எனக்காய் கொஞ்சம் நிறுத்த சொல்ளேன்..
உங்கள் வார்த்தையின் கனத்தை விட
கொல்கிறது இது என்னை...

சில நேரங்களில் பாச வலையிலும்
சிக்குப்பட்டு விடுவேன் நான்
அறுத்தெறிய வழி தெரிந்தும்
என் இதயக்கதவுகளின் சாவிக் கொத்தை
மட்டும்தெரிந்தும் நானே தொலைத்துவிட்டு..
என் காய்ந்து போன கண்ணீர்ச் சுவடுகளை
மறைத்தபடி புன்னகைக்கின்றேன்
உங்களுக்ககாய்....
இருந்தும் -என்
கனவுகள் காத்திருக்கின்றன
நான்கு சுவரின் கனத்த இருட்டுக்குள்....

Sunday 8 June, 2008

வாழ்கிறோம் நாமும்..


என் கனவுகளில்
நித்தம் 'செல்' விழும்
கிபீர் வரும்..
குண்டு விழுந்து வெடிக்கும்
உடல்கள் சிதற
குருதி தெறிக்கும்-பயத்துடன்
தூக்கம் கலையும்...
நிமிடங்களாய் நீளும்
நொடிகளில் உடல் உதறும்...
நான் வேறொரு தேசத்தில்
இருக்கின்றேன் என்பதை
நம்ப மறுக்கும்
நடுங்கும் மனது..

தாழ்வாய் பறக்கும்
விமானத்தை பார்க்கையில்
கிபீரும் புக்காரவும்
நினைவில் ஓடும்..
ஒருநொடி துடிக்க
மறுக்கும் இதயம்..
இத்தனை வலிகளிலும்
நாம் வாழ்ந்த நினைவுகள்
ஒரு கணம் வந்து போகும்
போரின் வடுக்கள்
அடிமனதில் பதிந்தபோது
எப்படி இனிக்கும்
அயல் நாடு வாழ்க்கை......

Wednesday 4 June, 2008

காதல் தொடருகிறது...

தொட்டுவிட முயன்றும்
தோற்றுப்
போயும்-மீண்டும்
துரந்தும் அலைகள்
என்னதான் காதலோ
கடற்கரை
மணல் மீது......

Saturday 31 May, 2008

உறக்கமற இரவுகளின்
சுவடுகளை மறைத்தபடி
புன்னகைப்பாய்
அத்தனை வலிகளிலும்
நிறைந்து விடுவேன் நான்
அந்த ஒற்றை நொடிப்பொழுதில்...

மஞ்சள் பூக்களின் வாசத்துடன்...




அபூர்பமாய் தரிசித்த
அதிகாலை பனியின்
சாலையோர மரங்களோடு நான்..
இரவெல்லாம் உதிர்த்த
மஞ்சள் பூக்களின் வாசம்
அந்த இடத்தை
நிறைத்துக்கொண்டு
அங்காங்கே காத்திருக்கும்
சாலையோர இருக்கைகளிலும்
பாதையெங்கும் படர்ந்திருக்கும் பூக்களை
மிதிக்காமல்
தாண்டிச் செல்லும் மனது

சின்ன குருவிகளின் சந்தோச பாஷையில்
மழை முன்னறிவிப்பு செய்ய
தூறல் சாரளில்..மனது
குழந்தையாய் மாறி குதுகளிக்கும்
அக்கப்பக்க பார்வைகளில்
பொல்லாத நாகரீகம் தடை போட்டு
கமுக்கமாய் பல்லிலிக்கும்
மனமின்றி கிளம்புகையில்
இன்னும் மஞ்சள் பூவும்
மண் வாசனையும்
துரத்தியபடி.......

Thursday 15 May, 2008

நிழல் தேடும் மனசு..

கோடைக்கால கதகதப்பில்
துவண்டு விழும் சருகுகளின் மேல்
உட்கார்ந்திருகிறது வெயில்..
புழுதி பறக்கும் தெருக்களில்
கானல்நீர் அங்கங்கே தலைகாட்ட
நிழல் தேடி அலைகிறது மனசு
கொங்கிறீட் காடுகளில்
பசுமரத்திற்கான தேடலோடு
பரபரக்கும் பார்வைதனை
என்ன சொல்லி ஆற்றிடுவேன்...


நவநாகரீக உலகத்தில்
இயற்கையை வென்று விட்டோம் என
செயற்கை குளிரூட்டியில்
இறுமார்ந்திருக்கும் மானிடனே
பாவம் அஃறிணை ஜீவன்களை
கொஞ்சம் நினைத்தாயா?

Monday 12 May, 2008

நீ ஏன் மெளனிக்கிறாய்?


என்னைக் கொல்ல
உன் பார்வைகளே
போதுமே - நீ
ஏன் மெளனிக்கிறாய்?

Thursday 8 May, 2008


மறந்ததாய் நினைக்கின்ற
சில நிஜங்கள்
இதயத்தில் விழும்
சாட்டை வலிகளாய்
அவ்வப்போது....
எழுத முடியாமல்
வார்த்தைகளற்று
கன்னத்தில் உருளும்
நீர்த்துளிகள்
பேனா மையை கரைத்தபடி.....

ஆயிரம் எண்ணங்கள் உண்டு-ஆனால்
எதனை எழுதுவது...
எங்கிருந்து எழுதுவது...
உங்கள் கற்பனை குதிரைகள்
தறிகெட்டு ஓடி விடும்

நிஜத்தையா
கற்பனையையா இல்லை
என் கனவுகளையா
ஆனாலும்
எழுதிவிட்டேன்
முடிவுகள் உங்கள் கையில்
தொடக்கம் மட்டுமே
என்னிடம்..
முற்றுப் பெறாமலேயே ..

எங்கிருக்கிறாய் நீ ?


எங்கிருக்கிறாய் நீ ?
எப்படி இருக்கிறாய் நீ?

ஒரே இடத்தில்
பக்கத்து வகுப்பறைகளில்
இருந்தபோதும் எத்தனையோ முறை
நேருக்குநேர் சந்தித்த போதும்
ஒருநாள் கூட
பேச முடிந்ததில்லை என்னால்
நீயும் கூடதான்
சிறு புன்னகையை வீசிவிட்டு
சென்றுவிடுவாய்-அதன்
அர்த்தம் புரியாமலேயே
கனவுகளில் மிதப்பேன்

உன் பெயர் கூட தெரியாமலேயே
எப்படி முடிந்தது உன்னை
ரசிக்க என்னால் -என்
நேசத்தை மட்டும்
சொல்ல முடியாமல்
எமை தடுத்தது எது..
இன்று வரை புரியவில்லை

வகுப்புக்குள் நுழைந்ததும்
உன்னை தேடும் என் கண்கள் உன்னை
கண்டபின்பு தானே
என் இருக்கை வரும்-நீ
எனை தேடும் நேரங்களையும்
அறிவேன் நான்!

இப்போது எங்கிருக்கிறாய் நீ
என தெரியாமலேயே
உன் நினைவுகளோடு நான்...
எப்படியிருக்கிறாய்
என் நேசத்திற்குரிய
உயிரே........

Tuesday 6 May, 2008

காத்திருக்கிறது உனக்கான என் காதல்..


தெரு ஓரத்தில்
பூத்திருக்கும்
ஒரு பூவாய்..
காத்திருக்கிறது
உனக்கான
என் காதல்
பறித்து செல்வாயா...
இல்லை
மிதித்து செல்வாயா?

Monday 28 April, 2008

புன்னகைக்கின்றாய் (இன்னும்)..

குப்பை கூடையில்
கிழித்துப் போட்ட
உன் புகைப்படம்
இன்னும்
சிரித்தபடி..

திருநங்கையாகிய நான்..

இன்று நான்
புதிதாய் பிறந்தேன்
கேலி பேச்சுக்களும்
குறு குறு பார்வைகளுக்கு
மத்தியில் எனக்கான
சுயத்தை தேடிய பயணத்தில்
என் அடையாளங்களை
தொலைத்துவிட்டு
வீட்டுக்குள்ளேயே
நாடோடியானேன்..
எனக்குள் நானே
முற்றுப்புள்ளிக்கான
தேடிய தேடல்
புதிய பெயரோடு
புதிய மனுசியாய்
நானும்..
ஆனாலும்
தோன்றவில்லை
என்
சுயத்தை அடைந்ததாய்
......

Friday 25 April, 2008

பாம்பும் புற்றுக்கு
பாலூற்றும்
தாயிற்கு
ஏன் தெரிவதில்லை
தெருவேர குழந்தையின்

வயிறு..

Tuesday 22 April, 2008

தூக்கம் வர மறுத்த
இரவுகளில்-சில
கவிதை வரிகள்
வந்து உரசும்..
விடிந்ததும் வார்த்தைகளை
தேடினால்
வெற்றிடமாய் அனைத்தும்....

நம்பிக்கையோடு..

நான்
நேசித்தது எல்லாம்
எங்கோ போனது
தனிமையில் நான்...

என்னைச் சுற்றியுள்ளதோ
இந்த பூமியும்
நம்பிக்கையும் மட்டுமே....

ஒற்றையாய்-ஒரு
வெளிச்சம்!
தொடமுடியாத
தூரத்தில்-ஆனாலும்
தொட்டுவிடுவேன் ஒருநாள்!

இப்போது நான்
உயிர் வசிப்பதன் அடையாளமாய்
என் மூச்சுக்காற்று
மட்டுமே என்னுடன்...

அனைத்தையும் தொலைத்துவிட்டு
இனந்தெரியாத
கனத்த இருட்டோடு
ஸ்நேகமாகின்றோம்
நானும்
என் நிழலும்
நம்பிக்கையோடு.....

காத்திருப்பு


காத்திருப்பது
சுகமானது-அதிலும்
உனக்கானதால் இன்னும்
அழகாகிறது!

Thursday 17 April, 2008

ஒருவருக்கொருவர்
பேசிக்கொள்ள
எவ்வளவோ இருக்க
அரைநொடி மெளனத்தில்
நிறைந்து விடுகிறது
பேசாமல் போன
அத்தனை வார்த்தைகளும்...

வாழ்க்கையின் ஓட்டத்தில்..

என் அத்துவ்வானக் காட்டில்
ஒற்றை வெளிச்சத்துடன்
என் நாட்கள் நகர்கின்றன
விடை தெரியா பல கேள்விகள்
ஆங்காரமாய் பல்லிழித்தபடி
கண்முன்னே..
வாழ்க்கையைப் பற்றிய
பல கனவுகளும் பல பயங்களும்
மாறி மாறி மெளனக்காட்சிகளாய்
வந்து செல்ல..
அங்கங்கே
சித்தாந்தமும் வேதாந்தவும்
தலைகாட்டியபடி..
மொத்தத்தில் பேரலையில்
சிக்குண்ட சிறகைப்போல்
நானும் -ஆனாலும்
அமைதியாக-ஒரு
சலனமில்லா நதியைப் போல
நகர்ந்து கொண்டே...

Monday 14 April, 2008

வாழ்க்கை ஒவ்வொருவருக்காகவும்

விடை தேடும் பயணங்களில்
அவ்வப்போது...
பல ஆச்சரியங்களையும்
பல புதையல்களையும்
கொடுத்துக்கொண்டு..
எப்போதும்
பல ரகசியங்களை
தன்னுள் ஒளித்து
ஒவ்வொருவருக்காகவும்
காத்திருகிறது.....
வாழ்க்கை
நாம் தான்
கண்டும் காணாமலும்
கடந்து கொண்டிருக்கின்றோம்....

Tuesday 18 March, 2008

எனக்காய் வாழ்வதேற்போது....


பெண்ணாய் பிறந்த நானும்
வாழ்கிறேன் இன்னோருவருக்காகவே
குழந்தையாய் இருந்தபோது
தந்தை என்னும் ஆணின்கீழ்..
கொஞ்சம் வளர்ந்தபின்

சகோதரனோடு
திருமண பந்தத்தால்
கணவன் என்னும் ஆணோடு
நாளை வாழ்ந்திருப்பேன்
மகனுக்காய்...

என் சுயங்களை மறந்துவிட்டு

இல்லை மறைத்துவிட்டு..
எனக்கான
விருப்பு வெறுப்பு
தேடல்கள் ஆசைகள்
அனைத்தையும் தொலைத்துவிட்டு
விரும்பியோ விரும்பாமலோ
ஆணை சுற்றியே
அமைந்துவிட்ட இவ்வுலகம்
எனக்காய் வாழ்வதேற்போது....

என்வாழ்விங்கே..


ஒவ்வொரு முறையும்
புன்னகைக்கின்றேன்
பார்த்தும் பாராமல் கடக்கும்
உங்களுக்காய்..
ஒரிரு நிமிடங்களே தரித்தாலும்
என் விரல்களால் காற்றோடு
கையசைக்கின்றேன் உங்கள் பார்வை
என்மீது படாதா என்னும் ஏக்கத்துடன்..

தெருவேர வெப்பக்குவியலோடு

நைந்துபோன என்னையின்
புடவையின் வேர்வையுடனும்
என்வாழ்விங்கே...

எல்லோரும் பார்க்கிறீர்கள்

உங்கள் பார்வைகள்தான் மாறுகின்றன
அதிசயமாய்..
அருவருப்பாய்..
முணுமுணுப்புடன் கடக்கும் உங்களுக்கு
எத்தனை வேலைகள்
எனக்காக நிதானிக்க நேரமேது...

நான் என்ன வரமா பெற்றுவந்தேன்

என் வாழ்விங்கே வாழ்வதற்கு..
கோழை ஆணின்
ஒருநேர சுகத்திற்காய் பெற்றுவிட்டாள்
என்னன்னை
என்ன பாவம் செய்து வந்தேன்

ஒற்றை ரூபாயை
வீசியேறியும் கைகளுக்கு
தெரியுமா நான்
நாளை
யாராவெனென்று...

Saturday 15 March, 2008

என் இந்திய நட்பே
என்ன சொல்லி புரிய வைப்பேன்
என் மண்ணை..
வீட்டு விருந்தாளியாய்
வந்தவர்களிடம்-எம்
நாட்டு நிலமைகளை
கொட்டிவிட்ட என்னன்னை
ஏன் இவ்வளவு நாளாய்
சொல்லவில்லை உன் சோகத்தை
என கேட்கும் உங்களிடம்....

நீங்கள் பரிதாபப்படுவதற்காய்

நாங்கள் ஒன்றும்
ஈழத்தில் பிறக்கவில்லை
உச்சுக் கொட்டி செல்வீர்கள்..
அப்புறம்..
வெள்ளி திரையின் மசாலாக்குள்ளும்
மரத்தை சுத்தும் 'டுயட்'க்குள்ளும்
காதலை தேடும் உங்களிடம்
என் மண்ணின் காதலை
எப்படி சொல்லிடுவேன்....

ஒரு நாள் உங்களால்

'கரன்ட்' இல்லாமல்
இருக்கமுடியுமா இல்லை
தொலைக்காட்சி இல்லாமல்
வாழ முடியுமா..
எப்படி சொல்லிடுவேன்
ஒரு சமுதாயமே
கற்கால வாழ்க்கை வாழ்ந்ததை..
நாங்கள் உடுத்திருந்த உடையோடு
ஊர் ஊராய் அலைந்ததை..
உங்கள் 'ரிவி'த்திரையில்
சில எழுத்துக்கள்
வெறும் வார்த்தைகள் தோன்றும்
"மென் இதயங்கள் தவிர்த்துவிடுங்கள்
கொடூரமான காட்சிகள்" என
ஆனால் என் மண்ணிலோ
நித்தம் சிதறிய உடல்களோடு
ரத்தமணத்துடன் நாம்
வாழ்ந்ததை...

நீங்கள் பாருங்கள்

உங்கள் வேலைகளை..
கிரிக்கெட்டில் தொலைந்து
போகவேண்டும்...
உங்கள் ஆதரச நாயகனின்
கட்டவுட்டிற்கு பால் அபிஷேகம்
செய்ய வேண்டும் ..
உங்களுக்கு ஏது நேரம்
எங்களுக்காய்
நின்று நிதானித்து
திரும்பிப் பார்க்க...

நாங்கள்

நாங்களாகவே
பிறந்தோம்..
போராடுவோம்..
சாவோம் ஆனால்
மீண்டும்
புதிதாய் பிறப்போம்..

Friday 14 March, 2008

என்ன சொல்லிடுவேன்..

எதை எழுதுவது...
ஆயிரம் கரு இருந்தாலும்
உங்கள் எண்ணங்களுக்கு என்னால்
வர்ணம் தீட்ட முடியாது..
என் கவிதையில்
கொஞ்சம் காதல் இருந்தால்
யாரைக் காதலிக்கிறாய்
எனக் கேள்வி..
உன் வரிகளில் ஏன்
அனைத்தையும் இழந்துவிட்ட
சோகம் என..

நட்பாய் எழுதி விட்டால்
யார் அந்த ஆண் என..
இத்தனை அம்புகளா
உங்களிடம்..
என்ன சொல்லிடுவேன் நான்..
நிஜங்களும் நிழல்களும்
விடாது துரத்த
எதை எழுதிடுவேன்
....

Wednesday 5 March, 2008

தேர்தல்
நேரங்களில் மட்டுமே
மக்களை தேடும்
கட்சிகள்..
எதற்கு என
தெரியாமலேயே
கை தட்டும் கூட்டம்...
தன் முதுகில்
சவாரி செய்யும்
தலைவனுக்காகவே
வாழ்ந்து மடியும்
தொண்டர்கள்.....
என்று மாறும் இந்த
எழைகளின் வாழ்வு.....
தெருவோர
ஜோசியக்காரன்
குறி சொல்லுகிறான்
வளமான வருங்காலத்தை
எல்லோரிடமும்
எனோ அவன்
மட்டும் அங்கேயே....
எழையின்
வீட்டிலும்
அடுப்பெரிகிறது
குடிசைகள்
தீ வைப்பு !
அன்று
சுடுகாடுகள்
ஊருக்கு

வெளியே -ஆனால்
இன்றோ

எம் ஊரே
சுடுகாடாய்....

Saturday 23 February, 2008

செவ்வானம் மையெழுத
வானம் முழுக்க
வெளிச்சம்
கலர் கலராய்..
நொடிக்கு நொடி
மாறும் உருவங்கள்
சின்ன கீற்றுக்களாய்...
தூரிகையின் சிதறல்களாய்
வண்ணப்புள்ளிகளின்
வர்ணயாலங்கள்....
ஓடி அலைந்து உருமாறி
கலைந்து போகும்
மேகக்கூட்டங்கள்...
நெருப்பு பந்தாய்
அந்தி சாயும் பகலவன்..
நிரை நிரையாய்
கூடு திரும்பும் புள்ளினங்கள்..
எத்தனை அழகை
தனக்குள் வைத்திருக்கிறது
இந்த இயற்கை.....

பாரதி !
எனக்குள் நீ
உன் கவிதைகளுக்குள் - நான்
தொலைந்து விட்டேன்!
இன்றும்
என்றும் நீ
வாழ்ந்து கொண்டிருப்பாய்
எனக்குள் !

Friday 22 February, 2008

சிரிக்க மறந்து
போன நான்கு
சுவர்களுக்குள்
மறக்காமல்
சிரிக்கிறது
"லாபிங் புத்தா"!
இனிய நட்பே
கடிதங்களில்
நம் உறவு தொடரும்
அந்நியம் வரும் என்று
நினைத்திருப்போமா..
எவ்வளவு அழகான

நாட்கள் அவை...
நாம் ஒன்றாய் இருந்த
அந்த நிமிடங்கள்
ஒவ்வொன்றும் இப்போதும்....
போர் மேகங்கள் சூழ்ந்த

நம் நாட்டிலும்-நாம்
எவ்வளவு சந்தோசமாக
இருந்தோம்..
நாம் பிரிந்தாலும்

எம் நேசம் என்றும்
பிரியாமல் வாழட்டும் !
நீ
என்னிடம் பேசிய
வார்த்தைகளை விட
மெளனமாகிய
நிமிடங்களிலையே
அறிந்து கொண்டேன்
உன்னை அதிக்கம் !

Monday 4 February, 2008

எம்
அக்கினி குஞ்சுகள்
மூட்டிய தீயில்-உன்
மூச்சுக்குழலில் அல்லவா
மூண்டுவிட்டது நெருப்பு
உன் கோட்டைக்குள்
வெடிக்கும் வெடி
உனக்கு சாவுமணியல்லவா
உங்கள் இரும்புக்கோட்டை
கனவுக் கோட்டையானதே
தமிழர் படையால்..

துட்டகைமுனு கொன்ற
எல்லாளன் அல்லவா
புதுபிறவி எடுத்துயிருக்கிறான்
புலி மறவராய்..
எம் ஊர்களில்
கந்தக நொடி வீசியவனே
பொறுத்துக்கொள் இனி
உன் இதயத்திற்குள்ளும்
வெடி வெடிக்கும்....

Sunday 27 January, 2008



நான்
நேசித்தது எல்லாம்
எங்கோ போனது
தனிமையில் நான்...
என்னைச் சுற்றியுள்ளதோ
இந்த பூமியும்
நம்பிக்கையும் மட்டுமே....

ஒற்றையாய்-ஒரு
வெளிச்சம்!
தொடமுடியாத தூரத்தில்-ஆனாலும்
தொட்டுவிடுவேன் ஒருநாள்!
இப்போது நான்
உயிர் வசிப்பதன் அடையாளமாய்
என் மூச்சுக்காற்று
மட்டுமே என்னுடன்...

அனைத்தையும்
தொலைத்துவிட்டு
இனந்தெரியாத
கனத்த இருட்டோடு
ஸ்நேகமாகின்றோம்
நானும்
என் நிழலும்
நம்பிக்கையோடு.....

Saturday 26 January, 2008


என் தாயே
என் மரணத்தில் கூட
உன்னிடமிருந்து பிரித்துவிடாதே
என்னை
எரிக்கவோ புதைக்கவோ
வேண்டாம்-உன்னில்
விதைத்துவிட
சொல்லிவிட்டேன்-நாளைய
விடியலுக்காய்
மீண்டும் புதிதாய்
பிறப்பேன்
ஆயிரம் விருட்சமாக ...
சந்தோசம் தரவில்லை
வெளிநாட்டு வாழ்க்கை
சவரில் குளிக்கும் உடல்
மனது மட்டும்
கிணற்றடி துலாவோடு...
இதமான ஏசியில்
முற்றத்து
வேப்பமரக் காற்று
நினைவை வருடுகிறது..

பீசாவும் பர்க்கரும்
வாயை அடைக்கையில்
அம்மாவின் புட்டும்
சிவப்பரிசி கஞ்சிக்கு
ஏங்கி தவிக்கிறது...

வாழ்க்கையை தொலைத்து
விட்டுநிழலை அல்லவா
துரத்துக் கொண்டிருக்கிறோம்
வாழ்கிறோம் எனச்சொல்லி
ம்ம்ம்..... நாமும்
வாழ்கிறோம் வெளிநாட்டில்......
வாழ்க்கையை
தேடுகிறேன்
வழி காட்டுங்கள் யாராவது
இல்லை
யாராவது என்னை
நேசியுங்கள்-நான்
வாழ்க்கையை
நேசிக்க தொடங்குகிறேன்
நான் எதை
தேடுகிறேன்
அதையாவது சொல்லுங்கள்
என் தேடலை
தொடங்குகிறேன்
இல்லையேல்
நான் தொலைந்துவிடுவேன் !

நீ
முதன் முதலாய்
நீட்டிய ஒற்றை ரோஜா
எனக்கு அறிமுகப்படுத்தியது
காதலை மட்டுமல்ல
என்னையும் தான்....
எங்கோ
எல்லையில் நடக்கும்
யுத்ததைப் பற்றி
சிலாகிக்கும் இவர்களிடம்
எப்படிச் சொல்வேன்-என்
தேசத்தில் நாம்
மரணத்திற்குள் வாழ்பவர்கள்
என்று....
.......
வாழ்க்கை

எதிர் பாராததை
எதிர்பார்பதே
வாழ்க்கை !
....
நான் நேற்று தசை பிண்டம்
இன்று கனவுகளிலான உடம்பு
நாளை ஒருபிடி சாம்பல் !
........
நேற்றைய
நினைவுகளை செருப்புக்களாக்கி
நாளைய கனவுக்காய்
நடை போடுவோம்!
......
கோழைகளின்
தற்பாதுகாப்பு தான்
தற்கொலை....
வாழ்க்கையை எதிர்கொள்ள
பயந்து....
..........
மக்களிடம்
கையேந்தியபவர்கள்
வென்றபின்
கை விரிக்கின்றார்கள் !
.......
சொர்க்கத்தில்
மத நல்லினக்க மாநாடு
இங்கிருந்து சென்ற பக்தர்களின்
மதக் கொள்கையால்-அங்கு
சிவனும் விஸ்ணுவும் அல்லாவும்
தங்களுக்குள் மோதிக் கொண்டார்கள்
தத்தம் பக்தனுக்காய்.....
.......
மொட்டவிழ்த பின்னும்
பூப்படையா பூவைப்போல
நானும்....
என் பெயர் எனோ
முதிர்கன்னி !
......

காதலும் கவிதையும்
இல்லையென்றால்
இந்த பூமிப்பந்து என்றரோ
வெறி பிடித்த மனித மிருகங்களால்
சிதைக்க பட்டிருக்கும்.....
...........


Friday 25 January, 2008

மீண்டும் வருமா ..


நானும் வாழ்ந்திருந்தேன்
ஒரு நாள்..
தென்னை மர அணிலோடும்
ஜன்னல் குருவி
சிட்டுக் குருவியோடும்
ஸ்நேகமாயிருந்தேன்..
வேப்பமரக் காற்றிலும்
பூவரச இலை பீப்பியோடும்..

என் வீட்டு
முற்றிய மாங்காய்விட்டு
பக்கத்து வீட்டு
மதிலேறிய
கிளிச்சொண்டு மாங்காயும்
இலந்தைப் பழமும்
நாவில் இனிக்கிறது.....

மாரிக்கால தவளையும்
அதிகாலை திருவெண்பாவையும்
காதுகளில் கேட்கின்றன..
முருகன் கோயில்
கொன்றை மரமும்
வெள்ளதில் நடக்கும்
சூரன் போரும்
இப்போதும் கண்முன்னெ...

வயல் வெளியில் நடக்கையில்
கடித்து துப்பிய அடிநெல்லும்
மிளகாய் தோட்ட
பரண் காவலும்
இன்னும் நெஞ்சுக்குள்....

விரசமற்ற தொடுகையோடு
கைபிடித்து பள்ளி சென்ற
முகம் மறந்த தோழர்களும்
சின்ன சண்டைகளும்
சிதறடிக்கும் சிரிப்புக்களுக்கும்
மனசு ஏங்குகிறது....

இத்தனையோடும் நானும்
வாழ்ந்திருந்தேன்
ஒரு நாள்....
இராணுவ வல்லூறுகள்
என் மண்ணை
சிதைக்கும் வரை.....
அலைகளின்
புரட்டலில்
அலைக்கழியும்
ஒற்றைச் செருப்பு....
அஸ்தி கரைத்து
உடைத்து போட்ட
மண்பானை....
கரையாமல் கிடக்கும்
தந்தமற்ற விநாயகர்...
விசியெறிந்த பூமாலை..
குட்டி நண்டுகளுக்காய்
காத்திருக்கும் காக்கைகள்....
மிதிபட்டு இறந்து போன
சின்ன உயிரனங்கள்...
காலைக் கடனாய்
கடற்கரையில்
முடித்துவிட்ட
மனித எச்சங்கள்...

தூரத்தில் பார்க்கையில்
கடல் கொள்ளை அழகுதான்
..
பூவுக்கு பூ மாறி
புணரும் கலப்பில்
பூவை மலடியாக்காமல்
பூப்பூக்க வைத்துவிட்டு
எட்டு நாளில்
மரித்துப்போகும்
வாழ்க்கை- ஆனாலும்
வேண்டுமல்லவா
வண்ணாத்துபூச்சி வாழ்க்கை !
அடிவானம் மையெழுத
துரத்தி தழுவும்
அலைகளின் சத்ததில்
பேச தோன்றாமல்
விக்கித்து நின்று
இமை கசிய
விழியால் கதை பேசி
விடை பெற்ற
அந்த வலி-இன்றும்
நெஞ்சுக்கூட்டினுள்...
பிரசவ வலியைவிட
கொடுமையல்லவா...
நம் பிரிவின் வலி!

"சே"!
அமெரிக்க வல்லூறுகளால்
பொலிவியக் காட்டில்
சிதைக்கப்பட வீரனே !

அவர்கள் உன்னை
கொன்று விட்டனர்-ஆனால்
புரட்சியின் பிம்பமாய்
அவர்களே உன்னை
விதைத்து விட்டனர்....

கியூபப் புரட்சியின்
மூளையே-இளைய
தலைமுறைக்கான
விடுதலையின்
அடையாளமாய்-அவர்களே
உன்னை விட்டு சென்றனர்...

புரட்சி நாயகனே!
எங்கே ஓரினம் ஒடுக்கபடுகிறதோ
அங்கெல்லாம் -உன்
பெயர் வாழ்ந்துகொண்டிருக்கும்....

Thursday 17 January, 2008


சொல்ல தெரியாமல்
தொண்டைக் குழியில்
குத்திய முள்ளாய்
தவித்து நிற்கிறாய்..
ஆனாலும் நானோ
புரிந்தும் புரியாமலும்
நடித்து நிற்கின்றேன்
சொல்லிவிடாதே என்னிடம்
உன் காதலை...
பதிலில்லை என்னிடம்

நான் நேசிக்கும்
இசையில் மீட்டுவது...
ஸப்தஸ்வரங்களையே
வருவதென்னமோ
முகாரி ராகம் தான்...

என் செல்லக் குட்டிக்கு....


என் செல்லக் குட்டிக்கு....


உன் ஒவ்வொரு
அசைவிலும் எனை
நான் மறந்தேன்..
துள்ளி நீ வரும்போது
என் மனமும் துள்ளும்...
எனை நீ தேடும் போதும்
எனக்காய் -நீ
காத்திருக்கும் போதும்...
ஒவ்வொரு நொடியும்
ஆயிரம் கோடி
சந்தோசங்கள் எனக்குள்!

என் கவலைகளையும்
என் தனிமையையும்
மறக்க செய்தவன் நீ!
உன் கண்கள் ஆயிரம்
கதை சொல்லும்...
எனக்குள் இருக்கும்
பெண்மையின் தாய்மையை
உணரச் செய்தவன் நீ!

நீ கொஞ்சும்
ஒவ்வொரு முறையும்
புதிதாய் பிறப்பேன் நான்!
மனிதர்களிடம் இல்லா
பாசத்தையும் நெசத்தையும்
உன்னிடம் கண்டேன்...

நீ என்னுடன் இருந்தால்
மெளனத்தின் சோகம்
தெரிவதில்லை எனக்கு..
நான் பேசும்
வார்த்தைகளின் அர்த்தம்
தெரிந்தவன் நீ!
நானும் தான்...

என் செல்லமே!
நான் உன்னை நேசிக்கின்றேன்....