Monday 25 August, 2008

நேசம் சொன்ன வேளையில்..


என் கனவுகளை
மொத்தமாய் உன்னிடம்
அடகு வைத்து நின்ற வேளையிலும்
உன் பார்வைக்காய்
கால் கடுக்கக் காத்திருந்தபோதினிலும்
உன் நேசம் எனக்கானதாயில்லை

என் ப்ரியம் சொல்லிக் காத்திருக்கையில்
என் மனக் கனவுகளை உதைத்தழித்தாய்
இப் பிரபஞ்சததைவிட அதிகமாய்
உனக்காய் நான் சேமித்ததெல்லாம் பறித்துக்
கேலி செய்து விலகிச் சென்றாய்

நிஜம் உறைக்க மெல்ல விழித்து
என் இதயச் சில்லுகளில் உன்
சுவடழித்து நிமிர்கையில்
சிரித்து நிற்கிறாய்
என் காதோரம் கிசுகிசுக்கிறது
உன் மூச்சுக்காற்று
'என் நேசம் உனக்கே தானென்று' .....

நான் நேசித்த ஜீவன்
காயப் படுத்தி விடக்கூடாதென்று
விலகி நடக்கிறேன்
தனித்து வந்த பாதையில்
வெகுதொலைவு கடந்தபின்
நானுணர்ந்த வலி
உனக்கும் வேண்டாமே

மீண்டும் நாம் சந்தித்தால்
நிதானமாய் நலம் விசாரிப்போம்
தத்தம் துணையோடு..
அதுவரை வாழ்ந்திடலாம்
நீ நீயாயும்
நான் நானாயும்..

Sunday 17 August, 2008

இயற்கையின் ரகசியம் புரிந்துவிட்டால்......



ஆதி மனிதனின் முதல் தேடல் ...
ஆதாம் ஏவாளின் முதல் சந்திப்பு ...
கருவறைக் குழந்தையின் பூமியின் சிபரிஸம் ...
மழைத்துளி மண்ணிடம் பேசும் முதல் ரகசியம் ...
எங்கும் வியாபித்த கண்ணுக்கு தெரியா காற்று ...
எண்ணி எண்ணி தவறவிட்ட நட்சத்திரமற்ற வானம் ...
நீலக்கடலின் கடைசி விளிம்பு ...
மொட்டவிழ்க்கும் மலரின் முதல் சுகந்தம் ...
புல் நுனிக்கு பனித்துளி கிரீடம் வைக்கும் நொடி ...
தொலைந்து போன காதலின் மிள்சந்திப்பு ...
நீல வானின் மறு பக்கம் ...
வானவில் ஜாலத்தின் அரைவட்டம் ...
ஈருயிர் இணைந்து ஒரு உயிர் உருவாகும் அதிசயம் ...
மரணத்தின் நெடி அறிந்த மனிதனின் இறுதி நினைப்பு.. .
உயிர் கரைந்து காணாமல் போகும் மாயம் ...
முட்டி மோதி யுகம் தோறும் அலைகள் கரையிடம் பேசும் ரகசியம் ...
யுத்த சத்தற்ற உலகம்...
கலைந்து போன கனவு..

இத்தனைக்கும் விடை தெரிந்தால்
வாழ்க்கை எப்படி இருக்கும்?
ம்ம்ம்.....
என் காதுகளில் கிசுகிசுகிறது இயற்கை
"இயற்கையின் ரகசியம் புரிந்துவிட்டால்
வாழ்க்கையில் சுவரஸம் எது...? "

Saturday 9 August, 2008

நட்பு என்று சொல்லிக்கொண்டு....


வாழ்க்கைப்பாதையில்
அனைத்தையும் தொலைத்ததாய்
நினைத்துத்தனித்திருந்த வேளையில்
நீயாகவே வந்தாய்..
நட்பு என்னும் பெயரோடு..
நான் சாய்ந்து கொள்ளத்
தோள் தேடுகையில்
உன் மடியினையே தந்தாய்-இன்று
பல வேஷமிட்டு பொய் பரப்பிச்
செல்கிறாய்...

உன் வார்த்தைகளில் தேன் தடவி
மெல்லக் கொல்லும் விஷ
ஜாலத்தை எங்கு கற்றாய்?
சிரித்துச் செல்லுகிறாய் நித்தம்
பல்லிடுக்கில் வழிகிறது பொறாமை
உன் கண்கள்
சில நேரங்களில் காந்தமாயும்
பல நேரங்களில் படுகுழியாயும் மாற
சித்தம் கலங்கி
விழுந்து எழும்புகின்றேன்-ஆனாலும்
நன்றி தான் சொல்வேன் உனக்கு
பல பாடங்களைக் கற்று கொடுப்பதும் நீதான்!
நின்று நிதானித்து
மனிதனின் விகாரங்களைத் தவிர்த்து
முகமூடி வேஷங்கள் களைந்து
இந்த உலகின் நிஜத்தை அறிய
தெரிந்துவிட்டேன்
உன்னுடன் பழகிய நாளிலிருந்து...

உன்னை நேசித்து விட்டேன்
என் நட்பால்
உன் சுயம் அறியாமல்...
பிரிந்து செல்லும் வழி தெரியவில்லை
வெறுத்துத் தூக்கி எறியவும்
நீயே
கற்றுக் கொடுத்து சென்றுவிடு !