Wednesday 15 October, 2008

என் கண்களில் இன்னும் ஜீவன் ...

என் கண்களில்
இன்னும் ஜீவன் மிச்சமாய் ..
உயிர் வாழ்வதன் அடையாளத்தோடு
மூச்சுவிடும் தேகம் ..
பசியில் சுருங்கிய இரைப்பை மட்டும்
விரியவேயில்லை ..

பருக்கைகள் அற்ற பானை
எப்போதும் அடுப்பில் ..
பாவம் என் பூனையும்
இன்னும் காத்திருக்கிறது
என்னைப் போலவே...

பசித்து அழும் என் தங்கைக்கு
மாங்காய் பறித்துத் தருகிறாள்
என் அன்னை ..
எத்தனை நாளைக்கு
மழைக்கு பதிலாய் குண்டு விழுந்ததில்
என் வன்னிக் காடுகள்
காய்த்து எரிந்தது கிடக்கின்றன ..

தாகம் தீர்க்க தண்ணீர் தேடிய
எமக்கு
இனி கவலை இல்லை ..
கார்த்திகை மார்கழியில் மழை வருமாம்
அம்மா சொன்னார் ...
என்ன கூடவே பாம்பும் பூரானும்
மறைவிடம் தேடி
எம் மரத்தடி வரக்கூடும் ..
எங்களைப் போலவே
அதன் வீட்டையும்
குண்டு போட்டிருப்பானோ ..

நித்தம்
விழும் 'செல் 'க்கு
விழுந்து படுத்தே
என் முழங்கால்ச் சில்லுகள்
தேய்ந்து விட்டன ..
அப்பாவை தேடும் தம்பிக்கு
எப்படிச் சொல்வேன் ..
விறகு பொறுக்க போனவர்
பிணமாய்த் தான் வந்தாரென..
அம்மா அழுதாள்
அப்பாவுக்காகவும்
பசித்தழும்
எங்களுக்காகவும் .....

உயிர் உறைய காத்திருக்கும்
ஒவ்வொரு வினாடியும்
கடந்து செல்லும் 'கிபிர்'
சத்தத்தில் பசி கூட
அவ்வப்போது மறந்துதான் போகிறது..
பதுங்கு குழியில் பிறந்த
என் வாழ்வு தொடர வேண்டுமெனில்
இன்னும் உயிர்
வாழ வேண்டும் நான் ..

பசிக்கிறது ...
எனக்கும்
என் மரத்தடி அணிலுக்கும் ..
கொஞ்சம் கொஞ்சமாய்
கரைந்து கொண்டிருக்கும்
ஜீவனுக்கு
சொல்லுகிறேன் நானும்
எம்துயர் நாளை
தீர்ந்து விடுமென....

5 comments:

geevanathy said...

////பசியில் சுருங்கிய இரைப்பை மட்டும் மட்டும் விரியவேயில்லை ..

பருக்கைகள் அற்ற பானை மட்டும்எப்போதும் அடுப்பில் ..பாவம் என் பூனையும் இன்னும் காத்திருக்கிறது என்னைப் போலவே..///

கண்ணீர் வரவைக்கிறது கவிதை
தொடர்ந்து எழுதுங்கள் பகிர்கையில் குறைகிறது துன்பம்

அன்புடன் ஜீவன்...

M.Rishan Shareef said...

//எம்துயர் நாளை
தீர்ந்து விடுமென...//

நிச்சயமாக ஸ்னேகிதி..
வலியுரைக்கும் கவிதை..

M.Rishan Shareef said...

அன்பின் ஸ்னேகிதி,

//இரைப்பை மட்டும் மட்டும் விரியவேயில்லை ..//

இரண்டு 'மட்டும்' வந்திருக்கிறது.

//பருக்கைகள் அற்ற பானை மட்டும்//

இந்த வரியில் 'மட்டும்' என்ற சொல் தேவையற்றது என நினைக்கிறேன்.

Sakthy said...

அன்பின் ஜீவன்
வருகைக்கும் கருத்துக்கும்
நன்றிகள் தோழரே..

Sakthy said...

அன்பின் ரிஷான்
வருகைக்கும் கருத்துக்கும் ,
உங்கள் திருத்தத்திற்கும் நன்றிகள்..
தோழரே..

Post a Comment