Thursday 17 July, 2008

துயரங்களை துரத்திக்கொண்டு..


யாதுமற்ற பெருவெளியொன்றின்
தடுக்கி விழவைக்கும் விளிம்பொன்றில்
எங்கும் சூழ்ந்த கருமையோடு
தனித்து நிற்கின்றேன் யாருமற்று..
கால்களை உரசிச் செல்லும் காற்று
அவ்வப்போது கீழிழுத்தும் செல்லும்
காதடைத்து செய்தி சொல்லும் தென்றல்
சில பாடல் வரிகளை கவர்ந்து வரும்
எங்கோ ஒரு ஜீவனின் புல்லாங்குழல்
வழியும் சோக இசையோடு...

சுழன்றடிக்கும் சில புயல்களின் மத்தியில்
சிறு நாணலாய் திசைமாறி
நிமிர்ந்தெழுவேன் மீண்டும்..
அவ்வப்போது
அடர்ந்து பரந்து கிடக்கும் இருட்டோடு
ஐக்கியமாகி காணாமல் போவதுமுண்டு
மீண்டும் தட்டுத்தடுமாறி
வழி நுகர்ந்து கரைசேரும் போதெல்லாம்
எங்கோ ஒருகை காலிடறி விழவைத்து
ஆங்காரமாய் பல்லிளித்து விலகிச்செல்லும்...
மனக்கண்ணில் ஊசலாடும்
எனக்கான பாதையினை
தொட்டுவிட தொடரும் மனம்..
முட்டி மோதி வீழ்ந்தெழுந்து
விரையத்தான் நினைக்கின்றேன்
அவ்வழியில் நீயிருந்தால்
கை கொடுக்க வந்திடாதே-என்
என் நம்பிக்கையை முடமாக்க அது ஒன்றே போதும்
கொஞ்சம் விலகியே நின்றுவிடு
நானாய் எழுந்திடுவேன்
இன்று இல்லையேல் என்றேனும் .....

4 comments:

Unknown said...

தனிமையிலிருந்தும், கடும் சோகத்திலிருந்தும் தனது தன்னம்பிக்கையைப் பாடும் கவிதை. அருமையாக எழுதுகிறீர்கள் ஸ்னேகிதி. தொடர்ந்து எழுதுங்கள். :)

Sakthy said...

/தனிமையிலிருந்தும், கடும் சோகத்திலிருந்தும் தனது தன்னம்பிக்கையைப் பாடும் கவிதை. /


நன்றிகள் ரிஷான் உங்கள் கருத்துக்கு

ஜியா said...

//என் நம்பிக்கையை முடமாக்க அது ஒன்றே போதும்
கொஞ்சம் விலகியே நின்றுவிடு
நானாய் எழுந்திடுவேன்
இன்று இல்லையேல் என்றேனும் .....
//

தன்னம்பிக்கையை ஊட்டும் அருமையான கவிதை

Sakthy said...

நன்றிகள் ஜி உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்..

Post a Comment