Saturday 15 March, 2008

என் இந்திய நட்பே
என்ன சொல்லி புரிய வைப்பேன்
என் மண்ணை..
வீட்டு விருந்தாளியாய்
வந்தவர்களிடம்-எம்
நாட்டு நிலமைகளை
கொட்டிவிட்ட என்னன்னை
ஏன் இவ்வளவு நாளாய்
சொல்லவில்லை உன் சோகத்தை
என கேட்கும் உங்களிடம்....

நீங்கள் பரிதாபப்படுவதற்காய்

நாங்கள் ஒன்றும்
ஈழத்தில் பிறக்கவில்லை
உச்சுக் கொட்டி செல்வீர்கள்..
அப்புறம்..
வெள்ளி திரையின் மசாலாக்குள்ளும்
மரத்தை சுத்தும் 'டுயட்'க்குள்ளும்
காதலை தேடும் உங்களிடம்
என் மண்ணின் காதலை
எப்படி சொல்லிடுவேன்....

ஒரு நாள் உங்களால்

'கரன்ட்' இல்லாமல்
இருக்கமுடியுமா இல்லை
தொலைக்காட்சி இல்லாமல்
வாழ முடியுமா..
எப்படி சொல்லிடுவேன்
ஒரு சமுதாயமே
கற்கால வாழ்க்கை வாழ்ந்ததை..
நாங்கள் உடுத்திருந்த உடையோடு
ஊர் ஊராய் அலைந்ததை..
உங்கள் 'ரிவி'த்திரையில்
சில எழுத்துக்கள்
வெறும் வார்த்தைகள் தோன்றும்
"மென் இதயங்கள் தவிர்த்துவிடுங்கள்
கொடூரமான காட்சிகள்" என
ஆனால் என் மண்ணிலோ
நித்தம் சிதறிய உடல்களோடு
ரத்தமணத்துடன் நாம்
வாழ்ந்ததை...

நீங்கள் பாருங்கள்

உங்கள் வேலைகளை..
கிரிக்கெட்டில் தொலைந்து
போகவேண்டும்...
உங்கள் ஆதரச நாயகனின்
கட்டவுட்டிற்கு பால் அபிஷேகம்
செய்ய வேண்டும் ..
உங்களுக்கு ஏது நேரம்
எங்களுக்காய்
நின்று நிதானித்து
திரும்பிப் பார்க்க...

நாங்கள்

நாங்களாகவே
பிறந்தோம்..
போராடுவோம்..
சாவோம் ஆனால்
மீண்டும்
புதிதாய் பிறப்போம்..

4 comments:

Anonymous said...

என் இனிய தோழி ஷக்தி,
நீ குறிப்பிட்டுள்ள கவிதை தொகுப்பு வெறும் கவிதை அல்ல... அது உன் உணர்வுகள். எவ்வளவு நாள் உன் மனதில் இருந்த கேள்விகள்? நீ எங்களை போன்று சுதந்திரமாக வாழும்... ஒரு வலிகளும் இல்லாமல் வாழ்க்கை வாழும் எங்களை போன்று மக்களிடம் கெட்க விரும்பிய கேள்விகள்... என்று நினைக்கிறேன்...?கண்டிப்பாக உன் உணர்வுகள் மதிக்க படவெண்டியது ...நான் மிகவும் மதிக்கிறேன் என் ஷக்தியை போன்று அவள் கவிதைகளையும்....ஒரு நண்பனாக மட்டும் இல்லாமல் ஒரு மனிதனாக...
உன் மக்கள் சுகந்திர காற்றை சுவாசிக்கும் காலம் வெகு தூரம் இல்லை. இருக்கவும் கூடாது


இப்படிக்கு உன் நண்பன்
பாகவதர்(சரண்)

Anonymous said...

எங்களுக்காக
நெடுமாறன் ஐயா இருக்கிறார்
அவர்போதும்...

சினிமாக்கூட்டம் எங்களுக்கு வேண்டாம்
அவர்களுக்கு உங்கள் கதையை
விளக்க முயற்சிக்கவேண்டாம்...
அவர்கள் விளங்கிக்கொள்ளப்போவதில்லை....

Sakthy said...

நன்றிகள் saravana.

Sakthy said...

நன்றிகள் Anonymous தோழரே

Post a Comment