Wednesday 24 December, 2008

சாத்தான்களின் வருகையால் ..


மனிதம் நசுங்கும் பொழுதொன்றில்
வரும் என் அவலக்குரல் -உங்களுக்கு
ஒப்பாரிப் பாடாலாய் தோன்றலாம்
இதுதான் வாழ்க்கை எமக்கு
நித்தம் சப்பாத்துக் கால்களில் மிதிபட்டு
நசுங்குகிறது எம் குரல்வளை...

உயிர் உறையக் கதவடைத்து துயில்கையில்
நாய்களில் ஓலத்தில் எமனின் பிரசன்னம் !
மூச்சு விட மறந்து உயிர் பற்றி தவிக்கையில்
இடித்து உடைகிறது கதவு
தாழ்ப்பாள் தெறிக்க ...

இராணுவ மிருகங்கள் ஊர் புகுந்தபின்
அன்றாட வலிகளாய் போனது இதுவும் ..
ஆண்பிள்ளைகள் கைதாக்கி முற்றத்திலே
சோதனை என தொட்டுத் தடவுகையில்
செத்துப் போகிறாள் முதல் தடவை தமிழிச்சி ..

பெற்றவர்
, கட்டினவர் கண்முன்னே
அடித்து உதைத்திழுத்து செல்லுகையில்
யார் கதறலும் விழுவதில்லை
நடுநிசி ,உச்சிப் பொழுது எதுவும் கிடையாது
தமிழனின் உயிருக்கு ..
நித்தம் பலி வேண்டும்
புத்தனுக்கு படையலாய் ...

கைதாகிப் போனவர் நாளை
சுடப்பட்டு மூச்சடங்கி கிடப்பார்
வாய்பிளந்து ,குருதி காய்ந்து ஈ மொய்க்க ..
நாடான்ற தமிழன் நாதியற்று தெருவினிலே
சாத்தான்களின் வருகையால்
வீதியெங்கும் முகாரி ராகம்...

என் ஒப்பாரிப் பாடல் இன்னும்
சத்தமாய் ஒலிக்கும் உம் காதுகளில்
ஊர் மொத்தம் சுடுகாடாய்ப் போனதில்
செத்து விழும் பிணங்களுக்கு மத்தியில் நின்று
இன்னும் சத்தமாய் ..
இனி .....

Thursday 11 December, 2008

சுயம் தொலைத்தவள் ...


கல்யாண கனவுகளில்
காத்திருந்தேன் நானும் ...
ஒருநாள் பொழுதொன்றில்
ஆடவனின் வலிய கரங்களுக்குள்
அடங்கிப் போனது என் பெண்மை ..

ஒரு புது உலகம் ,புதிய உறவுகள் ...
புரிந்தும் புரியாமலும் ஒரு வாழ்க்கை ...
காதலாய் காத்திருந்த நாட்கள் போய்
கொஞ்சம் கொஞ்சமாய் மனித விகாரங்கள்
பல்லிளிக்க தொடங்க
வார்த்தைகள் சாடையாகின்றன..

உன் ஆண்மையின் பெயர் சொல்லி
வதைக்கும் கணங்களில்
கரையும் கண்ணீரில்
பொசுங்குகிறது என் காதல் ...

என் சுயம் எழுந்து வீரிடுகையில்
பெண் ,பொறுமையின் அடையாளம் என்கிறாய்
பழைய பஞ்சாங்கங்க நளாயினி
அருந்தி,வாசுகி என பட்டியளிடுகிறாய்
உன் இன அயோக்கியர் பெயர்
தெரிந்திருந்தும் மௌனிக்கின்றேன்...

என் ரொக்கங்களை அள்ளிய
உன் கரங்கள் அவ்வப்போதும்
அணைக்கத்தான் செய்கின்றது
அடியின் வலிகளும் ரணங்களும்
அழுகின்றன ஊமையாய் ...

என் விருப்புக்கள் ஆசைகள்
எல்லாம் மறைந்துவிட்டு
மறந்து விட்டு
வேற்று மனுசியாகிறேன்
எனக்குள் நானே ..