Sunday, 4 October, 2009

பனித்திரை விலகும் ...


காய்ந்து போன மரங்களில்
எட்டிப் பார்கின்றன துளிர்கள்
நகர்ந்து செல்லும் நதி வழியே
சிறு கூழாங்கற்கள் இடமாறிக் கொண்டு ..

தேங்கி நின்ற குட்டையெல்லாம்
தவளைக் குஞ்சுகளின் சத்தத்தில் அதிர்கின்றன
கூடறுந்த பறவைகள் கூட மெல்ல
தமதிருப்பை உறுதி செய்ய தொடங்கியாச்சு
எல்லாம் மாறிக் கொண்டு தான் இருக்கின்றன
ஓடும் காலத்தோடு சேர்ந்து ..

நீளும் உன் நேசக்கரங்களில்
நெரிபடுகின்றன மூச்சுக் குரல்
பயங்கர வாதத்திற்கு எதிரான போர்
என்னும் புரியாத பெயரோடு
நீயும் உளறிக் கொண்டு தான் இருக்கின்றாய்
செவிட்டுக் காதுகளில் ...

முள்வேலிக்குள் அடைபட்ட கூட்டம்
எலும்புகள் நெரிபடும் ஓசையில்
மூச்சு ஒடுங்கி மெல்ல மெல்ல
முதுகு சொறிய தொடங்க
களையெடுப்பு முடிந்த கையோடு
ஆட்சி நீடிப்பு வேலைகளில் ரகசிய
தீர்மானங்கள் பின் கொல்லையில் நடக்குது

எலும்புத் துண்டுக்கு அடிபடும்
ஓநாய்களும் வெறி நாய்களும் போடும்
கூப்பாட்டத்தால் சலசலப்பு
தூக்கி போட்ட கைகள் எப்போது வேண்டுமானாலும்
உம் முதுகெலும்பை ருசி பார்க்கலாம்
கவனமாயிருங்கள் !

எல்லாம் அமைதியாகத்தான் போகிறது
பகலவன் வானில் தோன்றும் வரைத்தான்
பனித்துளியின் ஆர்ப்பட்டமெல்லாம்
எல்லாம் மாறத்தான் போகின்றன
ஓடும் காலத்தோடு சேர்ந்து ..

மழை


சட சடத்தது கொட்டுகிறது மழை
மெல்ல இறங்கி நனைகின்றேன்

"பைத்தியம் மாதிரி நனையாதே"
உள்ளே வா என அதட்டுகிறது ஒரு குரல்

அவளுக்கு மழையில் நனைவது ரொம்ப பிடிக்கும்
என் சம்மதமின்றியே வருகிறது பின்னாலிருந்து

மழைக்கு மட்டுமே தெரியும்
என் முகம் தழுவிச் செல்லும் துளிகளில்
உப்பு கரிப்பதை ...

Sunday, 31 May, 2009

துப்பாக்கிகள் குறிபார்க்கையில் ...


காற்றே தூது செல்வாயா ?
இன்னும் நான் உயிரோடு உள்ளதை
என் உறவுகளுக்கு சொல்லி வருவாயா ...
சுற்றிய மறைப்பும் மாற்று உடுப்பும்
அற்று வேடிக்கைப் பொருளாய்
வாய்பொத்தி நிற்கின்றோம் ..

நாய்களுக்கு தூக்கி எறியும்
பொட்டலத்தில் கூட கருணை இருக்கும் !
முள்வேலி அடைப்புக்குள்
கொடுப்பதை வாங்கிக் கொண்டு
வெறும் பிணங்களாய் வாழ்கின்றோம் !
உரத்துக் கதைக்கவோ ,எதிர்த்துக் கேட்டவோ
ஏன் சத்தமாய் அழவோ
முடிவதில்லை இங்கு ...

நகர்ந்து செல்லும் மேகக் கூடமே
ஒரு நிமிடம் நில்லு ..
துப்பாக்கி முனைகள் குறிபார்க்கையில்
சிரிக்க சொல்லி புகைப்படம் எடுத்து
ஏமாற்றும் வித்தையினை உலகிற்கு சொல்லி விடு
ஒரு பிடி பால்மாவிற்காய் கால் கடுக்க நிற்கையில்
உரசிச் செல்கிறது இராணுவ மிருகமொன்று ..

ஆள்க்காட்டி கூடமொன்று அலைகிறது இங்கு ...
பிடித்தவன் பிடிக்காதவன் -ஏன்
முறைத்தவன் கூட காணமல் போகிறான்
விசாரணைக்கு போனவர் திரும்பி வருவதில்லை
கட்டைத் தலைமயிர் பிள்ளைகள்
ஏரிக்கரைகளில் மிதகின்றன ...
நலன்புரி முகாமென்று
நரகவதை நித்தம் இங்கு ..

சீழ் பிடித்த காயங்களை
கிளறிப் பார்த்து வழியும் குருதியில்
தேடுகிறான் புலியை ..
சின்னக் குழந்தை கூட
தப்பவில்லை இன்னும் ...

போர் தின்று தீர்த்தால் கூட
ஒரு நொடியில் முடிந்திருக்கும்
அனைத்தும் -சுயம் நொருங்கி
இங்கு நித்தமல்லவா செத்துப் போகிறோம் ..
காற்றே போய் சொல்லு
நான் இன்னும் இயிரோடு உள்ளதை ...

Tuesday, 7 April, 2009

வந்த நாள் முதல் ..


சின்ன மின்மினிகள் ஏந்திச் செல்கிறன
ஒரு நாள் பொழுதொன்றின் வெளிச்சத்தை
ஊதாப் பூவின் வாசத்தோடு
கலைகிறது மாலை வானம்

மறந்து போன பாடலொன்றை
முணுமுணுக்கிறது காற்று
கரை மீதான காதலை எப்போதும் போலவே
உரத்துச் சொல்லும் அலைகள்

எல்லாம் அழகாய்த்தான் இருகின்றன ...
ஒரு ஞாயிற்றுக் கடற்கரை

காக்காய் துரத்தி
உப்பு மாங்காய் சாப்பிட்டு
சுடு சோளம் கடித்து
கலர் பலூன் குறி பார்க்கும்
குழந்தைகளை பார்க்கும் வரை..

இவர்களை போலவே வாழப் பிறக்கையில்
ஏன் நித்தம் செத்து மடியும் கொடுமை
ஈழத்தில் மட்டும் ?
அதே பத்துமாதம் கர்ப்பத்தில்
காத்திருந்து இப் பூமி வருகையில்
எமனுக்கு மட்டுமேன் நித்திய பிரசன்னம் ?

வெப்ப பெருமூச்சொன்று
வெளிக் கடந்து போகையில்
இது பொறாமையா இல்லை ஏக்கமா ?
துரத்துகிறது கேள்வியொன்று ...

Friday, 27 February, 2009

நாளை என் மரங்கள் துளிர்க்கும் ..


அடர்வனங்களில் நுழைய வழியற்று
எட்டி பெருமூச்சு விட்ட சூரியக்கதிர்கள்
இன்று காவலிழந்த காடுகளின் வழியே
மெல்ல ஊடுருவ -அதன் வெம்மை
தாழாமல் கரைகின்றன இலைமேல்
படிந்திருந்த பனித்துளிகள்..

காத்திருந்த கழுகுகளும் வல்லூறும்
இரை மிகுதியால் ஆர்ப்பரித்தத்தில்
சத்தமாய் தான் இருக்கிறது என் காடு !
இரத்த வாடையுடன் பிசுபிசுக்கும்
மண்ணில் புதையும் கால்கள்
இடருகையில் எலும்புக் கூடுகள் வழியெங்கும் ..

ஓடுகிற நதிகூட தன்னியல்பு
மாறி நிறம் மாறுகிறது என் தாய்
தேசத்தை தழுவியதால் ..
மீண்டும் சிதறுகின்றன பனித்துளிகள்
கடந்து செல்கிறது
பிணந்தின்னிக் கழுகொன்று ....

Tuesday, 27 January, 2009

தேவை கொஞ்சம் ஆக்ஸிஜன் ...


மரணத்தின் விளிம்பில் நின்று
கதறுகிறது ஓர் இனம்
கேட்கிறதா உம் காதுகளுக்கு?
காப்பார் எவருமற்று ...

எதைக் கேட்டோம் உம்மிடம்

வாழ்வுரிமை குற்றமா?
உங்களைப் போலவே நாமும்
ஜீவிக்கத்தான் பிறப்பெடுத்தோம் இங்கு ...
நித்தம் செத்துப் போகயல்ல ..

இழப்பதெல்லாம் இழந்தாயிற்று- இனி
எதுவுமில்லை உயிரைத் தவிர ..
நாளைய உலகிற்கு சொல்ல என்ன உண்டு?
பிணந்தின்னி கழுகுகள் நிறைந்திருக்கும்
வானத்தின் கீழிருந்து ஒப்பாரியை தவிர ..

சுகந்திரக் காற்றை சுவாசிக்க
ஆசையுற்ற எம் குரல்வளையை
நசுக்கும் கரங்கள் ஆயிரம் ..
நாளை தப்பிப் பிழைத்தால்
நன்றி சொல்வோம் உமக்கு ..
மறக்காமல் கொஞ்சம்
ஆக்ஸிஜன் அனுப்பி வைத்தால் ...

என்ன பிழை செய்தோம் ...
ஈழத்தில் தமிழராய் பிறந்தது தப்பா?
ஆம் என்று சொல்லிவிடாதீர்கள்
ஆயிரம் முறை பிறப்போம் நாம் !

எட்டிப் பாருங்கள் எம்மண்ணை
குருதி நனைந்து கடைசி உயிர்
துடித்துக் கிடப்பதை ...
என்ன செய்வாய் மனிதமே
இனியாவது ....?

Sunday, 4 January, 2009

கனவுக் குதிரைகளின் வழித்தடத்தில் ..காகித முகத்தை கத்தரித்து
புன்னகைப் பூவை ஏந்தி நிற்போம்
நகர்ந்து செல்லும் நதியிலிருந்து
நழுவி விட்ட கூழங்கல்லாய்
நனையட்டும் இதயம் ..

காய்ந்து போன கண்ணீர் துளிகள்
கொஞ்சம் கொஞ்சமாய் வைரமாகட்டும்
காற்றுக் கூட காத்திருந்து மூச்சாகட்டும்
அச்சுவாசத்தில் புது சுகந்தம் பரவட்டும்

பழமைகள் மங்கிப் போய் புதைந்தழிய
அச்சம்பலினுடே புதுமைகள் துளிரட்டும் ..
கோபங்களும் அவமானங்களும்
விழிகளில் தீப்பந்தமாய் மாற
கொஞ்சம் தீ பரவி சுயத்தை சூடக்கட்டும்

பெருமூச்செல்லாம்
புயலாகி வழி சமைக்கட்டும் ..
அந்த கானக வழியினுடே
கனவுக் குதிரைகள்
தறிகெட்டு ஓடட்டும்..

Wednesday, 24 December, 2008

சாத்தான்களின் வருகையால் ..


மனிதம் நசுங்கும் பொழுதொன்றில்
வரும் என் அவலக்குரல் -உங்களுக்கு
ஒப்பாரிப் பாடாலாய் தோன்றலாம்
இதுதான் வாழ்க்கை எமக்கு
நித்தம் சப்பாத்துக் கால்களில் மிதிபட்டு
நசுங்குகிறது எம் குரல்வளை...

உயிர் உறையக் கதவடைத்து துயில்கையில்
நாய்களில் ஓலத்தில் எமனின் பிரசன்னம் !
மூச்சு விட மறந்து உயிர் பற்றி தவிக்கையில்
இடித்து உடைகிறது கதவு
தாழ்ப்பாள் தெறிக்க ...

இராணுவ மிருகங்கள் ஊர் புகுந்தபின்
அன்றாட வலிகளாய் போனது இதுவும் ..
ஆண்பிள்ளைகள் கைதாக்கி முற்றத்திலே
சோதனை என தொட்டுத் தடவுகையில்
செத்துப் போகிறாள் முதல் தடவை தமிழிச்சி ..

பெற்றவர்
, கட்டினவர் கண்முன்னே
அடித்து உதைத்திழுத்து செல்லுகையில்
யார் கதறலும் விழுவதில்லை
நடுநிசி ,உச்சிப் பொழுது எதுவும் கிடையாது
தமிழனின் உயிருக்கு ..
நித்தம் பலி வேண்டும்
புத்தனுக்கு படையலாய் ...

கைதாகிப் போனவர் நாளை
சுடப்பட்டு மூச்சடங்கி கிடப்பார்
வாய்பிளந்து ,குருதி காய்ந்து ஈ மொய்க்க ..
நாடான்ற தமிழன் நாதியற்று தெருவினிலே
சாத்தான்களின் வருகையால்
வீதியெங்கும் முகாரி ராகம்...

என் ஒப்பாரிப் பாடல் இன்னும்
சத்தமாய் ஒலிக்கும் உம் காதுகளில்
ஊர் மொத்தம் சுடுகாடாய்ப் போனதில்
செத்து விழும் பிணங்களுக்கு மத்தியில் நின்று
இன்னும் சத்தமாய் ..
இனி .....