Sunday 23 November, 2008

காதல் ஏன் காதலானது ...?


சிறு புள்ளியில் தொடங்கும்
ஓவியத்தின் தெரிகிறது
அருவமான காதல் ...

ஆசையாய் வைத்து
மொட்டவிழும் முதல் பூவிற்காய்
காத்திருக்கையில் காதல் ...

முத்தமிட்டுச் செல்லும்
சிறு குழந்தையின் எச்சிலின்
ஈரப் பிசுபிசுப்பில் காதல் ...

உறக்கத்தின் நினைவுகளில்
தலை கோதும் விரல்களின்
கதகதப்பில் கனவுகளாய் காதல் ..

நண்பனின் கரம் பற்றி
நடக்கும் வினாடிகளில்
நம்பிக்கையாய் சிரிக்கும் காதல் ..

அனைத்தும் தொலைத்தாய்
தனித்து அழுகையில்
தோள் தரும் நட்பில் காதல் ..

வீடு பூட்டிக் காவல் வைத்த
நாய்க் குட்டியின்
விசுவாசத்தில் காதல் ..

எங்கோ யாருக்கோ நடக்கும்
அவலத்தைக் கண்டு கசியும்
விழியில் கண்ணீராய்க் காதல் ...

விரும்பிய பதார்த்தம்
ரசித்து சமைக்கையில் சூடு பட்ட
விரல்களில் எரிகிறது காதல் ..

இயற்கையை வாழ்வை
அணு அணுவாய்
ரசிக்கையில் காதல் ...

எல்லோருக்குள்ளும் எப்போதுமே
ஒளிந்துதான் இருக்கிறது
காதல் ...
அப்படியெனில்
ஆணும் பெண்ணும் செய்யும்
பரஸ்பர நேசம் மட்டும்
எப்படிக் காதலானது ... ...

4 comments:

M.Rishan Shareef said...

எல்லாவற்றிலும் இருக்கும் காதல் ஆணும் பெண்ணும் பழகிடும் போது மட்டும் வெளிப்படையாய்க் கண்ணில் தெரிவது ஏனெனக் கேட்கிறீர்கள்.. ஆதி தொட்டு வரும் விடையற்ற அல்லது விடை கண்டறிய முடியாத கேள்வி. :)

கவிதை அருமை..!

Anonymous said...

vanakam akka,nalla irrukrathu unga kavithaikal good luck .....nd congrats

ur friend frm UK..

Sakthy said...

நன்றிகள் தோழரே உங்கள் வருகைக்கு.. நிஜமாகவே இந்த கேள்வி என்னை துரத்துகிறது ..பாசம், நேசம் ,நட்பு எல்லாம் 'காதல்' என்னும் ஒற்றை சொல்லில் அர்த்தம் இல்லாமல் போகிறதா இல்லையென்றால் அதற்கான அர்த்தம் என்ன ?

Sakthy said...

நன்றிகள் ... உங்க பெயர் அறியலாமா ?

Post a Comment