Sunday 30 November, 2008

நினைவுச் சின்னமாய்...


சுட்டுச் செல்கிறது
முதல் முறையாய் கண்ணீர்
வழிந்த கன்னத் தடத்தில்
அமில எரிச்சல் ...

உச்சியில் நிற்பதாய்
கொக்கரித்த மனம் -இன்று
தலை கீழாய் விழுந்ததில்
துண்டு துண்டாய் இதயம் ...

பாதரசமழிந்த கண்ணாடியில்
கீறுபட்ட கோடுகளினோடு
கை கொட்டி சிரிக்கிறது
என் முகமூடி ...

தோற்றுப் போக மாட்டேன்
என தொங்கி நின்ற மனதை
'பெவிக்கால்' ஒட்டி
பத்திரப் படுத்துகிறேன் ...


சில நம்பிக்கைகள் அழிந்ததால்
சில தோல்விகள் வலிக்கின்றன
நாளை அனுபவம் என்று சொல்லி
அதுவும் கண் சிமிட்டும் ..

நாளைய நினைவுகளுக்கு
நினைவுச் சின்னமாய்
இருந்து விட்டுப் போகட்டும்
என் இதயம் ...

Sunday 23 November, 2008

காதல் ஏன் காதலானது ...?


சிறு புள்ளியில் தொடங்கும்
ஓவியத்தின் தெரிகிறது
அருவமான காதல் ...

ஆசையாய் வைத்து
மொட்டவிழும் முதல் பூவிற்காய்
காத்திருக்கையில் காதல் ...

முத்தமிட்டுச் செல்லும்
சிறு குழந்தையின் எச்சிலின்
ஈரப் பிசுபிசுப்பில் காதல் ...

உறக்கத்தின் நினைவுகளில்
தலை கோதும் விரல்களின்
கதகதப்பில் கனவுகளாய் காதல் ..

நண்பனின் கரம் பற்றி
நடக்கும் வினாடிகளில்
நம்பிக்கையாய் சிரிக்கும் காதல் ..

அனைத்தும் தொலைத்தாய்
தனித்து அழுகையில்
தோள் தரும் நட்பில் காதல் ..

வீடு பூட்டிக் காவல் வைத்த
நாய்க் குட்டியின்
விசுவாசத்தில் காதல் ..

எங்கோ யாருக்கோ நடக்கும்
அவலத்தைக் கண்டு கசியும்
விழியில் கண்ணீராய்க் காதல் ...

விரும்பிய பதார்த்தம்
ரசித்து சமைக்கையில் சூடு பட்ட
விரல்களில் எரிகிறது காதல் ..

இயற்கையை வாழ்வை
அணு அணுவாய்
ரசிக்கையில் காதல் ...

எல்லோருக்குள்ளும் எப்போதுமே
ஒளிந்துதான் இருக்கிறது
காதல் ...
அப்படியெனில்
ஆணும் பெண்ணும் செய்யும்
பரஸ்பர நேசம் மட்டும்
எப்படிக் காதலானது ... ...

Sunday 2 November, 2008

புன்னகைப் பூவிற்கு ஒரு அஞ்சலிக் குறிப்பு ..


செல்வமே தமிழரின் செல்வனே..
தமிழ்ச் செல்வனே..
போராட்ட வாழ்க்கையில் புன்னகையால்
அறியப்பட்ட எம் அண்ணனே ...

களங்களில் சமராடுகையில் தீரம் காட்டினாய் ..
அரசியல் மேடைகளில் விவேகம் காட்டினாய் ...
தெரிந்தவனுக்கு உங்கள் புன்னகை புரியும்
தெரியாதவனுக்கு உங்கள் புன்னைகை தெரியும் ..

அதன் அர்த்தத்தின் ஆழத்தை
தலைவன் மட்டுமே அறிந்திருப்பார் ....
உம்முடன் இருந்த தோழர்களும் தான் ..
அறுவருடன் ஆகுதியான எம் அண்ணலே ..
ஓராயிரம் ஆண்டானாலும் - எம்
நினைவுகளில் வாழ்வீர் !

உலகமெங்கும் சாமாதான பிரதிநிதியாய்
உலாவந்த செல்வனே ..
வலுவிழந்த கால்களோடு போராடிய
உன் சிறகுகளை சிதைத்தல்லவா
சிங்கள வல்லூறுகள் கொக்கரித்தது ...

உம் வீரம் மட்டுமல்ல புன்னகையும்
காலம் காலமாய் கதை சொல்லும் ..
நின்மதியாய் துயில்வாய் எம் அண்ணா
நாளை நாம் தூவும் விடியல்
மலர்களில் உன் புன்னகையும்
மீண்டும் பூப்பூக்கும் .....