Sunday 27 January, 2008



நான்
நேசித்தது எல்லாம்
எங்கோ போனது
தனிமையில் நான்...
என்னைச் சுற்றியுள்ளதோ
இந்த பூமியும்
நம்பிக்கையும் மட்டுமே....

ஒற்றையாய்-ஒரு
வெளிச்சம்!
தொடமுடியாத தூரத்தில்-ஆனாலும்
தொட்டுவிடுவேன் ஒருநாள்!
இப்போது நான்
உயிர் வசிப்பதன் அடையாளமாய்
என் மூச்சுக்காற்று
மட்டுமே என்னுடன்...

அனைத்தையும்
தொலைத்துவிட்டு
இனந்தெரியாத
கனத்த இருட்டோடு
ஸ்நேகமாகின்றோம்
நானும்
என் நிழலும்
நம்பிக்கையோடு.....

Saturday 26 January, 2008


என் தாயே
என் மரணத்தில் கூட
உன்னிடமிருந்து பிரித்துவிடாதே
என்னை
எரிக்கவோ புதைக்கவோ
வேண்டாம்-உன்னில்
விதைத்துவிட
சொல்லிவிட்டேன்-நாளைய
விடியலுக்காய்
மீண்டும் புதிதாய்
பிறப்பேன்
ஆயிரம் விருட்சமாக ...
சந்தோசம் தரவில்லை
வெளிநாட்டு வாழ்க்கை
சவரில் குளிக்கும் உடல்
மனது மட்டும்
கிணற்றடி துலாவோடு...
இதமான ஏசியில்
முற்றத்து
வேப்பமரக் காற்று
நினைவை வருடுகிறது..

பீசாவும் பர்க்கரும்
வாயை அடைக்கையில்
அம்மாவின் புட்டும்
சிவப்பரிசி கஞ்சிக்கு
ஏங்கி தவிக்கிறது...

வாழ்க்கையை தொலைத்து
விட்டுநிழலை அல்லவா
துரத்துக் கொண்டிருக்கிறோம்
வாழ்கிறோம் எனச்சொல்லி
ம்ம்ம்..... நாமும்
வாழ்கிறோம் வெளிநாட்டில்......
வாழ்க்கையை
தேடுகிறேன்
வழி காட்டுங்கள் யாராவது
இல்லை
யாராவது என்னை
நேசியுங்கள்-நான்
வாழ்க்கையை
நேசிக்க தொடங்குகிறேன்
நான் எதை
தேடுகிறேன்
அதையாவது சொல்லுங்கள்
என் தேடலை
தொடங்குகிறேன்
இல்லையேல்
நான் தொலைந்துவிடுவேன் !

நீ
முதன் முதலாய்
நீட்டிய ஒற்றை ரோஜா
எனக்கு அறிமுகப்படுத்தியது
காதலை மட்டுமல்ல
என்னையும் தான்....
எங்கோ
எல்லையில் நடக்கும்
யுத்ததைப் பற்றி
சிலாகிக்கும் இவர்களிடம்
எப்படிச் சொல்வேன்-என்
தேசத்தில் நாம்
மரணத்திற்குள் வாழ்பவர்கள்
என்று....
.......
வாழ்க்கை

எதிர் பாராததை
எதிர்பார்பதே
வாழ்க்கை !
....
நான் நேற்று தசை பிண்டம்
இன்று கனவுகளிலான உடம்பு
நாளை ஒருபிடி சாம்பல் !
........
நேற்றைய
நினைவுகளை செருப்புக்களாக்கி
நாளைய கனவுக்காய்
நடை போடுவோம்!
......
கோழைகளின்
தற்பாதுகாப்பு தான்
தற்கொலை....
வாழ்க்கையை எதிர்கொள்ள
பயந்து....
..........
மக்களிடம்
கையேந்தியபவர்கள்
வென்றபின்
கை விரிக்கின்றார்கள் !
.......
சொர்க்கத்தில்
மத நல்லினக்க மாநாடு
இங்கிருந்து சென்ற பக்தர்களின்
மதக் கொள்கையால்-அங்கு
சிவனும் விஸ்ணுவும் அல்லாவும்
தங்களுக்குள் மோதிக் கொண்டார்கள்
தத்தம் பக்தனுக்காய்.....
.......
மொட்டவிழ்த பின்னும்
பூப்படையா பூவைப்போல
நானும்....
என் பெயர் எனோ
முதிர்கன்னி !
......

காதலும் கவிதையும்
இல்லையென்றால்
இந்த பூமிப்பந்து என்றரோ
வெறி பிடித்த மனித மிருகங்களால்
சிதைக்க பட்டிருக்கும்.....
...........


Friday 25 January, 2008

மீண்டும் வருமா ..


நானும் வாழ்ந்திருந்தேன்
ஒரு நாள்..
தென்னை மர அணிலோடும்
ஜன்னல் குருவி
சிட்டுக் குருவியோடும்
ஸ்நேகமாயிருந்தேன்..
வேப்பமரக் காற்றிலும்
பூவரச இலை பீப்பியோடும்..

என் வீட்டு
முற்றிய மாங்காய்விட்டு
பக்கத்து வீட்டு
மதிலேறிய
கிளிச்சொண்டு மாங்காயும்
இலந்தைப் பழமும்
நாவில் இனிக்கிறது.....

மாரிக்கால தவளையும்
அதிகாலை திருவெண்பாவையும்
காதுகளில் கேட்கின்றன..
முருகன் கோயில்
கொன்றை மரமும்
வெள்ளதில் நடக்கும்
சூரன் போரும்
இப்போதும் கண்முன்னெ...

வயல் வெளியில் நடக்கையில்
கடித்து துப்பிய அடிநெல்லும்
மிளகாய் தோட்ட
பரண் காவலும்
இன்னும் நெஞ்சுக்குள்....

விரசமற்ற தொடுகையோடு
கைபிடித்து பள்ளி சென்ற
முகம் மறந்த தோழர்களும்
சின்ன சண்டைகளும்
சிதறடிக்கும் சிரிப்புக்களுக்கும்
மனசு ஏங்குகிறது....

இத்தனையோடும் நானும்
வாழ்ந்திருந்தேன்
ஒரு நாள்....
இராணுவ வல்லூறுகள்
என் மண்ணை
சிதைக்கும் வரை.....
அலைகளின்
புரட்டலில்
அலைக்கழியும்
ஒற்றைச் செருப்பு....
அஸ்தி கரைத்து
உடைத்து போட்ட
மண்பானை....
கரையாமல் கிடக்கும்
தந்தமற்ற விநாயகர்...
விசியெறிந்த பூமாலை..
குட்டி நண்டுகளுக்காய்
காத்திருக்கும் காக்கைகள்....
மிதிபட்டு இறந்து போன
சின்ன உயிரனங்கள்...
காலைக் கடனாய்
கடற்கரையில்
முடித்துவிட்ட
மனித எச்சங்கள்...

தூரத்தில் பார்க்கையில்
கடல் கொள்ளை அழகுதான்
..
பூவுக்கு பூ மாறி
புணரும் கலப்பில்
பூவை மலடியாக்காமல்
பூப்பூக்க வைத்துவிட்டு
எட்டு நாளில்
மரித்துப்போகும்
வாழ்க்கை- ஆனாலும்
வேண்டுமல்லவா
வண்ணாத்துபூச்சி வாழ்க்கை !
அடிவானம் மையெழுத
துரத்தி தழுவும்
அலைகளின் சத்ததில்
பேச தோன்றாமல்
விக்கித்து நின்று
இமை கசிய
விழியால் கதை பேசி
விடை பெற்ற
அந்த வலி-இன்றும்
நெஞ்சுக்கூட்டினுள்...
பிரசவ வலியைவிட
கொடுமையல்லவா...
நம் பிரிவின் வலி!

"சே"!
அமெரிக்க வல்லூறுகளால்
பொலிவியக் காட்டில்
சிதைக்கப்பட வீரனே !

அவர்கள் உன்னை
கொன்று விட்டனர்-ஆனால்
புரட்சியின் பிம்பமாய்
அவர்களே உன்னை
விதைத்து விட்டனர்....

கியூபப் புரட்சியின்
மூளையே-இளைய
தலைமுறைக்கான
விடுதலையின்
அடையாளமாய்-அவர்களே
உன்னை விட்டு சென்றனர்...

புரட்சி நாயகனே!
எங்கே ஓரினம் ஒடுக்கபடுகிறதோ
அங்கெல்லாம் -உன்
பெயர் வாழ்ந்துகொண்டிருக்கும்....

Thursday 17 January, 2008


சொல்ல தெரியாமல்
தொண்டைக் குழியில்
குத்திய முள்ளாய்
தவித்து நிற்கிறாய்..
ஆனாலும் நானோ
புரிந்தும் புரியாமலும்
நடித்து நிற்கின்றேன்
சொல்லிவிடாதே என்னிடம்
உன் காதலை...
பதிலில்லை என்னிடம்

நான் நேசிக்கும்
இசையில் மீட்டுவது...
ஸப்தஸ்வரங்களையே
வருவதென்னமோ
முகாரி ராகம் தான்...

என் செல்லக் குட்டிக்கு....


என் செல்லக் குட்டிக்கு....


உன் ஒவ்வொரு
அசைவிலும் எனை
நான் மறந்தேன்..
துள்ளி நீ வரும்போது
என் மனமும் துள்ளும்...
எனை நீ தேடும் போதும்
எனக்காய் -நீ
காத்திருக்கும் போதும்...
ஒவ்வொரு நொடியும்
ஆயிரம் கோடி
சந்தோசங்கள் எனக்குள்!

என் கவலைகளையும்
என் தனிமையையும்
மறக்க செய்தவன் நீ!
உன் கண்கள் ஆயிரம்
கதை சொல்லும்...
எனக்குள் இருக்கும்
பெண்மையின் தாய்மையை
உணரச் செய்தவன் நீ!

நீ கொஞ்சும்
ஒவ்வொரு முறையும்
புதிதாய் பிறப்பேன் நான்!
மனிதர்களிடம் இல்லா
பாசத்தையும் நெசத்தையும்
உன்னிடம் கண்டேன்...

நீ என்னுடன் இருந்தால்
மெளனத்தின் சோகம்
தெரிவதில்லை எனக்கு..
நான் பேசும்
வார்த்தைகளின் அர்த்தம்
தெரிந்தவன் நீ!
நானும் தான்...

என் செல்லமே!
நான் உன்னை நேசிக்கின்றேன்....

பூவின் வாசம் வேண்டும்!
காற்றின் வேகம் வேண்டும்!

குயிலின் இனிமை வேண்டும்!
மழையின் சாரல் வேண்டும்!

மழலையின் உள்ளம் வேண்டும்!
தென்றலின் மென்மை வேண்டும்!

வாழ்வில் அமைதி வேண்டும்!
இயற்கையின் அணைப்பு வேண்டும்!

இதமாய் வார்த்தை வேண்டும்!
தட்டிக் கேட்கும் துணிவு வேண்டும்!

தயவாய் அணைக்கும் தோழமை வேண்டும்!
நட்பாய் பழகும் பெற்றோர் வேண்டும்!

தோள் கொடுக்கும் உடன்பிறப்பு வேண்டும்!
தோல்வியை தாங்கும் இதயம் வேண்டும்!

விழுந்தாலும் எழும் இதயம் வேண்டும்!
வீரராய் சாகும் வாழ்வு வேண்டும்!

கனிவாய் என்றும் காதல் வேண்டும்!
காலம் முழுக்க கவிதை வேண்டும்!

எம்மண் என்னை அழைக்க வேண்டும்!
உன்னில் என்னை விதைக்க வேண்டும்!
என்னை உன்னில் கரைக்க வேண்டும்!
இதுவே என்வாழ்வாய் வேண்டும்!

தோற்று
போவதற்கு
காதல் ஒன்றும்
பரீட்சையல்ல...
ஒருமித்த- இரு
இதயங்களின்
சங்கீத பாஷை
!

காதலை
தூர நின்று
எட்டிப்பார்த்தால்-அது
பனித்துளிக்குள் தெரியும்
வானவில்லைப் போல
கொள்ளை அழகு-ஒரு
நொடிக்குள்
ஆயிரம் வர்ணயாலங்கள்
தொட்டுப் பார்த்தால்.....

வேண்டும் எமக்கு விடுதலை.......


நெடிய பயணம்
இதுவரை கொடுத்த
விலைகளும் அதிகம்
வீடு இழந்தோம்
ஊர் இழந்தோம்
சொத்து இழந்தோம்
சொந்தம் இழந்தோம்
இன்றுநாடும் பிரிந்து
அகதி என்னும்
முத்திரையுடன்
அயல் நாட்டில் குடி புகுந்தோம்!
போதும் இந்த அவலங்கள்
விரக்திகள் வேதனைகள்
இனியும் வேண்டாம்!
இந்த போர் மேகங்கள்
எம் அடுத்த சந்ததியாவது
நின்மதியாய் சந்தோசமாக
வாழ வேண்டும்-எம்
தாய் மண்ணில்..வேண்டும்
எமக்கு விடுதலை
அடுத்த தலைமுறையாவது
விடியலில் வாழட்டும்!

Wednesday 16 January, 2008

வருடம் முடிந்து
நாட்குறிப்பேட்டை
புரட்டுகையில் புரிகிறது
எத்தனை நாட்கள்
விணடிக்கப்பட்டிருக்கின்றன என்று..
.....................
பிறப்பு முதல்
இறப்பு வரை
வாழ்க்கை என்னும்
தொடர் ஓட்டப் போட்டியின்
இறுதி எல்லைக்கோடு தான்
மரணம்!.
.............
வருடம் முடிந்து
நாட்குறிப்பேட்டை
புரட்டுகையில் புரிகிறது
எத்தனை நாட்கள்
விணடிக்கப்பட்டிருக்கின்றன என்று..
......................
தோற்றுப்போய்
விடுவேனோ
எனப் பயந்தே
காதல் பரீட்சையை
எழுத விரும்பவில்லை..
...................
இயந்திரக் கோளாறில்
லிப்டில் சிக்கிய-பிறகுதான்
புரிந்தது கூண்டுக்கிளியின்
அவஸ்தை

.......................

காதல்
இல்லாமல் வாழ்கையில்
சுவாரஸ்சம் இல்லைத்தான்
ஆனால்-காதல் மட்டுமே
வாழ்க்கை இல்லை....

......................

ஏன் சீறினாய் கடலன்னையே?


ஏன் சீறினாய்
கடலன்னையே ?
யார் மேல் இந்த கோபம்
அப்பாவி உயிர்களை
காவு கொண்டதில்
அப்படியென்ன குரூர
சந்தோசம் உனக்கு..
உன் கோபத்தை
என் நாட்டிலுமா காட்டுவது...
போரினால்
ஊர் இழந்தோம்
உடமை இழந்தோம்
ஆனால்....
உடுத்திருந்த உடையையும்
அல்லவா நீ
எடுத்துச் சென்றாய்
எல்லாம் இழந்து
நிற்கிறதே என் இனம்!

யுத்ததால் நாம் இழந்தது
போதவில்லையா உனக்கு?
எத்தனை உயிர்களை
பலி கொடுத்தோம்-நீ
மட்டும் விட்டுவைத்தாயா எம்மை
படகேறியவர்களை பாடையெற்றினாயே!
உன் ரத்த வேறி அடங்கவில்லையா?
நீயே முந்திக் கொண்டு
உள்ளே பாய்ந்தது ஏனம்மா?

பச்சைக் குழந்தைகளின்
பால் வடியும் முகத்தை
பார்த்த பின்பாவது
ஓய்ந்து இருக்கலாமே..
நீயும் கூட சிங்களவர்களோடு
கூட்டு சேர்ந்துவிட்டாயா?
வருங்கால புலிக்குட்டிகளை அழிக்க...

உன் அலைக்கரங்களில்
தவழ்ந்த புதல்வர்களையா
நீ அழித்தாய்?
தணிந்ததா உன் கோபம்....

போரினால்
அனைதையும் இழந்த பின்னும்
நிமிர்ந்து நின்றதே என் தேசம்
நீயோ ஆணிவேரை அல்லவா
பிடிங்கி எறிந்து விட்டாய்..
ஆனாலும்
நாங்கள் எழுவோம்!
பினிக்ஸ் பறவையை போல
பார்த்துக்கொண்டிரு
உன்னில் தான் எங்கள் பயணமும்...

இத்தனை உயிருடன்
நிறுத்திவிடு உன் வெறியை
என் தேசம்
கொஞ்சம் நிமிரட்டும்
உன்னை எதிர்தே - நாம்
நிற்போம் நாளை!

Tuesday 15 January, 2008

வாழ்க்கையை கற்றுக் கொள்ள வேண்டுமா ?

பூக்களிடம் வாருங்கள்
புன்னகைக்க பழகலாம்...

காற்றை நேசியுங்கள்
சாதிமத பேதங்களை மறக்கலாம்...

கடலலையை பாருங்கள்
விடாமுயற்சியை கற்கலாம்...

மழையில் நனையுங்கள்
மன அழுக்குகள் கரையலாம்...

நிலாவை காதலியுங்கள்
சமத்துவத்தை காணலாம்...

மழலையை பாருங்கள்
வெள்ளை மனசை படிக்கலாம்...

மொத்தத்தில்
இயற்கையை நேசியுங்கள்
வாழ்க்கைக் பாடம் அங்கே....

என் தாய் மண்ணே...


உலகின்

எங்கோ ஒரு

மூலையில் நான்

இருந்தாலும்

உணர்வுகள் மட்டும்-என்றும்

என் மண்ணைத்தான்

சுவாசித்துக்கொண்டிருக்கும்!
என் உறவுகளே....
நான் எழுதியிருப்பது கவிதையா எனத் தெரியாது.
என் நாட்குறிப்பேட்டில் நான் கவிதையென கிறுக்கியவை..
இன்று ஓடு உடைத்து வரும் குஞ்சைப் போல
உங்கள் பார்வைக்கு...
கவிதையின் இலக்கணத்திற்கு
முரண் பட்டால்
மன்னித்துவிடுங்கள்.
உங்கள் விமர்சனங்கள்
வரவேற்கப்படுகின்றன

தமிழ் உறவுகளுக்கு........

என் உறவுகளே....
புதிதாய் நான்..
உங்கள் இதயங்களோடு கைகுலுக்க....
நான்...
பாரதி நேசித்த பெயர்
பிறந்ததோ தமிழர் தேசத்தில்...
இருப்பது தமிழகத்தில்..
நேசிப்பது
இயற்கையை....
கவிதையை..
காதலை...
வெறுப்பது..
பொய்களையும்..
போலித்தனமான உறவுகளையும்...
நம்புவது ..
என்னையும்..
நட்பையும்..