Wednesday 15 October, 2008

என் கண்களில் இன்னும் ஜீவன் ...

என் கண்களில்
இன்னும் ஜீவன் மிச்சமாய் ..
உயிர் வாழ்வதன் அடையாளத்தோடு
மூச்சுவிடும் தேகம் ..
பசியில் சுருங்கிய இரைப்பை மட்டும்
விரியவேயில்லை ..

பருக்கைகள் அற்ற பானை
எப்போதும் அடுப்பில் ..
பாவம் என் பூனையும்
இன்னும் காத்திருக்கிறது
என்னைப் போலவே...

பசித்து அழும் என் தங்கைக்கு
மாங்காய் பறித்துத் தருகிறாள்
என் அன்னை ..
எத்தனை நாளைக்கு
மழைக்கு பதிலாய் குண்டு விழுந்ததில்
என் வன்னிக் காடுகள்
காய்த்து எரிந்தது கிடக்கின்றன ..

தாகம் தீர்க்க தண்ணீர் தேடிய
எமக்கு
இனி கவலை இல்லை ..
கார்த்திகை மார்கழியில் மழை வருமாம்
அம்மா சொன்னார் ...
என்ன கூடவே பாம்பும் பூரானும்
மறைவிடம் தேடி
எம் மரத்தடி வரக்கூடும் ..
எங்களைப் போலவே
அதன் வீட்டையும்
குண்டு போட்டிருப்பானோ ..

நித்தம்
விழும் 'செல் 'க்கு
விழுந்து படுத்தே
என் முழங்கால்ச் சில்லுகள்
தேய்ந்து விட்டன ..
அப்பாவை தேடும் தம்பிக்கு
எப்படிச் சொல்வேன் ..
விறகு பொறுக்க போனவர்
பிணமாய்த் தான் வந்தாரென..
அம்மா அழுதாள்
அப்பாவுக்காகவும்
பசித்தழும்
எங்களுக்காகவும் .....

உயிர் உறைய காத்திருக்கும்
ஒவ்வொரு வினாடியும்
கடந்து செல்லும் 'கிபிர்'
சத்தத்தில் பசி கூட
அவ்வப்போது மறந்துதான் போகிறது..
பதுங்கு குழியில் பிறந்த
என் வாழ்வு தொடர வேண்டுமெனில்
இன்னும் உயிர்
வாழ வேண்டும் நான் ..

பசிக்கிறது ...
எனக்கும்
என் மரத்தடி அணிலுக்கும் ..
கொஞ்சம் கொஞ்சமாய்
கரைந்து கொண்டிருக்கும்
ஜீவனுக்கு
சொல்லுகிறேன் நானும்
எம்துயர் நாளை
தீர்ந்து விடுமென....

நாளைய உலகிற்கு நாம் என்ன விட்டுச் செல்வோம் ?

எவ்வளவு இழி பிறவி நாம்
நீ கொடுப்பதை எல்லாம் எடுத்துக் கொண்டு
திருப்பிக் கொடுப்பதென்ன?

பசுமைசூழ் இவ்வுலகத்தை
பாழ்வெளியாக்கி விட்டு
மானிடப்பிறவி நாமென மார்தட்டி நிற்கின்றோம்
காடுகளை மொட்டையாக்கி
கொங்கிரிட் சுவரெழுப்பி
மேகத்தை தொட்டவனே
உன் மகத்துவத்தை என்ன சொல்ல..

மழைத்துளிக்கு பதிலாய்
அமிலமழை பெய்ய வைத்தாய்
என்னவாகும் பூமி ?
காற்று
மண்டலத்தை கரியமிலமாக
மாற்றி விட்டு
நுரையீரல் வெடிக்க
மூச்சு முட்டுகிறாள் உன் அன்னை..

இருக்கும் மரத்தையெல்லாம் வெட்டி தள்ளி
கர்ப்பிணி மேகத்தை கருகலைப்பு செய்தாய்
இப்போது மறக்காமல்
மழை வரம்
வேண்டி கழுதைக்கு கலியாணம் வேறு
ம்ம்ம்ம்ம்
இன்னும் இரங்குகிறாள் இல்லை பார் ..

ஓசோன் கூரையில் ஓட்டை போட்டாய்
அந்தாட்டிக் பனிபாறைகள் உருகி வழிகின்றன ..
அணுகுண்டு சோதனை என ஆளாளுக்கு
வெடித்ததில் பூமிப்பந்தே
கறுத்துக் கொண்டிடுக்கிறது .....
பிறக்கும் தேவதைக் குழந்தைகள்
இப்போது சிறகுமட்டுமல்ல
அங்கங்கள் இல்லாமல்
அவலட்சணமாய் வருகிறார்கள் ..
ம்ம்ம்ம்
நீ தொடர் உன் வேலையை ...

காற்று நசுங்கும் போக்குவரத்து நெரிசலில்
சுவாசம் எல்லாம் தூசுபடலம்
தும்மினால் கூட கரிக்கும் மூக்கு ....
போதாக் குறைக்கு மணல் வாரித் தின்று தீர்த்து
உன் மடியெல்லம் வளிச்சாச்சு ..

நீர் நிலைகள் வற்றி பசித்தவன் வயிறுபோல்
வெடித்து காய்கின்றன
2075 ல் குடி தண்ணீர் இருக்காதாம்
பரவாயில்லை விடு
அதுவரை நாம் என்ன
உயிர் வாழவா போகிறோம் ..

இன்னும் என்ன வைத்திருக்கிறாய் சொல்லிவிடு
பறித்துக் கொள்ள நாம் மீதமிருக்கின்றோம்
பெற்ற தாயை மூளியாக்க ஆசைப்படும்
பிள்ளைகள் நாங்கள்...
ஆனாலும் சந்திரனுக்கே
ராக்கெட் விடும் அதி புத்திஜீவிகள் ..

நாளைய தலைமுறைக்கு
நாம் என்ன விட்டு செல்வோம் ?

கந்தக நெடி விசும் காற்றையா..
பிளாஸ்ரிக் பூக்களின் தோட்டத்தையா ...
கார்பன் வாயுவால் வீங்கி வெடிக்கும்
மொட்டைக் மலைக் காடுகளையா .....
நாளைய உலகிற்கு
நாம் என்ன விட்டுச் செல்வோம் ?